ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த படம் வேட்டையன். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து, இந்திய சினிமாவையே உலுக்கிய ஞானவேல் தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இதனை தயாரித்து இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தின் போதே அதற்கான நட்சத்திர பட்டியல் வெளியானது.
பாலிவுட் உலகில் அமிதாப் பச்சன், தெலுங்கில் இருந்து ராணா, மலையாளத்திலிருந்து பகத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர், இதுபோக துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காவல்துறை பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கல்வித்துறையில் உள்ள சிக்கலையும் இந்த திரைப்படம் விவரிப்பதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி நாகர்கோவில் சென்னை புதுச்சேரி மும்பை என பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கமிட்டானார். அதற்காகவே, இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகளை விரைந்து முடிக்க ரஜினிகாந்த் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. சூட்டிங்கிற்கான வேலையில் சற்று தாமதம் காட்டினார் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய முந்தைய திரைப்படங்கள் அனைத்தும், போதைப் பொருட்களை மையப்படுத்தியும், அதற்கு எதிராக நாயகன் செயல்படுவது போன்றும் இருக்கும். இந்த முறை அந்த தியரியை தூக்கி எறிந்து இருக்கிறார் லோகேஷ்.
இதற்காகத்தான் அவர் திரைக்கதை எழுதுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல சோதனை முயற்சியாகவே இந்த திரைப்படத்தை தான் எடுப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு வீடியோவும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் படத்திற்கான சூட்டிங் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதில் சத்யராஜ் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படி இருக்க புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், கூலி திரைப்படத்தில் நடிக்கிறாராம். முதல் நாள் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீரியட் கேங்ஸ்டர் திரைப்படமாக கூலி எடுக்கப்படுவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.





