ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படம் மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது. படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் கமல்ஹாசன் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில் அமரன் படம் தீபாவளி பண்டிகை தினமான இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ஆன விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அமரன் படத்தின் சிறப்பு காட்சி திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி மற்றும் ஜீவி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அமரன் படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின் படக் குழுவினரை பாராட்டி உள்ளார். மேலும் படம் பார்த்தபின் அலைபேசியில் நடிகர் கமலை தொடர்புக் கொண்டு, அமரன் படம் குறித்து தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் தனது வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நண்பர் கலைஞானி கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் திரைப்பட வடிவிலும் உண்மை கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வு பூர்வமாக படமாக்கியுள்ள இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன், இந்து ரெபகா வர்கீஸ் பாத்திரங்களை தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் அமரன் படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் பெரிய சல்யூட் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி, கடந்த ஞாயிறு அன்று விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டையும் வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளார். அந்த மாநாட்டில் திமுகதான் தனது அரசியல் எதிரி என்றும் பகிரங்கமாக கூறியிருக்கிறார். அதே போல் தமிழ் சினிமாவில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன்தான் என்றும் கூற துவங்கியிருக்கின்றனர். இதில் சிவகார்த்திகேயன் நடித்த படத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியிருப்பது, வைரலாகி வருகிறது.





