தமிழ்நாட்டில் ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்தால் அந்த ஆட்சியை மக்கள் வெறுக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகி விடும். அதனால் அதிமுக – திமுக ஆட்சி செய்த கடந்த காலத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும்கட்சி தான் எப்போதுமே ஜெயிக்கும். அதற்காக கோடிக்கணக்கில் பணம் தொகுதியில் புரளும். வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கும்.
அதனால் இடைத்தேர்தல் வந்து விட்டாலே அந்த தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் தான். ஏனென்றால் பரிசு பொருட்களும் பணமும் பல விதங்களில் குவிந்து விடும். ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்த தொகுதிகளில் குவிந்து வெற்றிக்கான எல்லா யுக்திகளையும் செய்து மக்களை தங்கள் வசப்படுத்தி வெற்றியை தக்க வைக்க முயற்சிப்பார்கள்.
அந்த வகையில் ஆளுங்கட்சி தவெக இப்போது மதுராந்தம் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்கிறது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக தவெக ஆளுங்கட்சியாக இருந்து இந்த இடைத்தேர்தலில் பலத்த தோல்வியை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் ஒட்டுமொத்த குரலாக உள்ளது.
ஏனென்றால் ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் கடுமையான விமர்சனங்களை சர்ச்சைகளை தவெக அரசு சந்தித்து வருகிறது. முதல்வர் விஜய் மீதும் தவெக அமைச்சர்கள் மீதும் மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் தவெக தோல்வியடைந்த தொகுதிகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிமுகவில் ஜெயித்த இந்த வேட்பாளர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக கட்சிக்கு தாவிய நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களை முட்டாள் ஆக்கிய துரோகிகள் என்ற கடும் விமர்சனத்தில் பிரசாரத்துக்கு சென்ற இந்த வேட்பாளர்களை தொகுதி மக்கள் விரட்டியடித்த சம்பவங்களும் நிறைய நடந்தன.
இந்த நிலையில் தொகுதியில் தோல்விக்கான வாய்ப்பு அதிகம் என்ற நிலையில் ஏற்கனவே மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் விஜய், இன்று 30க்கும் மேற்பட்ட இடங்களில் ரோடு ஷோ சென்று மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். சட்டசபை தேர்தலின் போது பல தொகுதிகளுக்கு செல்லாத விஜய், இப்படி ஒரு தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்வது, தோல்வி பயம்தான் காரணம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





