தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரண். அதே போல் தெலுங்கில் சினிமா தயாரிப்பாளராக இருப்பவர் அல்லு அரவிந்த். இவரது மகன் அல்லு அர்ஜூன். இந்த 2 குடும்பங்களும் உறவுமுறையில் சொந்தக்காரர்கள்தான். ராம்சரண், அல்லு அர்ஜூன் இருவருமே உறவுக்காரர்கள்தான். இருவருமே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.
இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது புஷ்பா 2 படம் வெளியாகி 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உலக சாதனை செய்துள்ளது. அதே நேரத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் பிளாப் ஆனது. அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக உள்ள நடிகர் அல்லு அர்ஜூனனின் தந்தை அல்லு அரவிந்த், ராம்சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படம் தோல்வி அடைந்திருப்பதாக சமீபத்தில் நடந்த தண்டேல் பட விழாவில் விமர்சித்து பேசினார். அவரே இப்படி பகிரங்கமாக கேம் சேஞ்சர் படம் தோல்வி என அறிவித்தது, ராம்சரண் தரப்புக்கு பலத்த அதிருப்தியை தந்துள்ளது.
அதே நேரத்தில் கேம் சேஞ்சர் படம் வெளியான போது அல்லு அர்ஜூன் தரப்பிலிருந்து ராம்சரனுக்கு வாழ்த்து தெரிவித்து எந்த பதிவும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் நடிகர் ராம்சரண் மிகவும் வருத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து அல்லு அர்ஜூனை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நடிகர் ராம்சரண் திடீரென நிறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் அல்லு அர்ஜூனின் சகோதரர் அல்லு சிரிஷை இன்ஸ்டாகிராமில் ராம்சரண் இன்னும் பின்தொடர்ந்து வருகிறார்.
நடிகர் சிரஞ்சீவி மகன் ராம் சரணும் அல்லு அரவிந்த் மகன் அல்லு அர்ஜூனும் தாய் மாமன் உறவு முறை கொண்டவர்கள். இருவரும் மைத்துனர்கள். அப்படி நெருக்கமான உறவில் இருக்கும்போது இந்த குடும்பங்களுக்கு இடையே உறவு முறையில் தொழில் போட்டி காரணமாக விரிசல் ஏற்பட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மைத்துனர்களாக உள்ள பிரபல நடிகர்களுக்கிடையே தொழில் போட்டியால் குடும்ப உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமின்றி கேம் சேஞ்சர் படம் வெளியாகும் முன்பே அல்லு அர்ஜூன் தரப்பில் ஒரு கும்பல் மூலமாக கேம் சேஞ்சர் படம் பிளாப் என்று வதந்தியை பரவியதாகவும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.





