இப்போதைய திமுக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர் திமுக அமைச்சர்களில் உள்ள சீனியர்களில் மிக முக்கியமானர். கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் அமைச்சர் எவ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் என்னும் நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் அந்த நூலை வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் குறித்து பெருமையாக பேசினார். திமுக பெற்று வரும் தேர்தல் வெற்றிகள், சாதனைகள், ஸ்டாலினின் ஆளுமை என புகழ்ந்து தள்ளினார்.
அப்போது நடிகர் ரஜினிகாந்த், திமுகவில் பல சீனியர் மாணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் படித்து முடித்தாலும் பள்ளியை விட்டு செல்லாத மாணவர்களாக இருக்கின்றனர் என்று திமுக சீனியர் அமைச்சர்களை குறிப்பிட்டு பேசினார். அதிலும் குறிப்பாக துரைமுருகன் போன்றவர்களை சமாளிக்க முடியாது என கருணாநிதியே கூறியிருக்கிறார். அந்தளவுக்கு கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர் துரைமுருகன் என்றும் பேசினார்.
ரஜினிகாந்த், திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து விமர்சித்து பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. தன் கட்டுப்பாட்டில் இல்லாத மூத்த திமுக அமைச்சர்களை ரஜினிகாந்த் மூலம் ஸ்டாலின்தான், இப்படி பேச வைத்திருக்கிறார் எ்ன்றும் ஒரு விமர்சனம் எழுந்து பரபரப்பானது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், பல்லுப் போன நடிகர்கள் எல்லாம், தாடியை வளர்த்துக்கொண்டு இன்னும் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இளம் தலைமுறையினருக்கு அவர்கள் வழிவிட வேண்டும் என்று பகிரங்கமாக கூறினார். அவர் ரஜினியை தான் குறிப்பிட்டு பேசுகிறார் என்று அவரது பேச்சும் வைரலானது. ரஜினி ரசிகர்கள் இதனால் கோபப்பட்டனர்.
இந்த சூழலில், அமைச்சர் துரைமுருகன் இப்படி பேசியது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அமைச்சர் துரைமுருகனும், நானும் நீண்டகால நண்பர்கள், என்று கூறிச் சென்றுவிட்டார். பிறகு இதுபற்றி பதிலளித்த துரைமுருகனும், நான் நகைச்சுவையாக தான் அப்படி சொன்னேன். அதில் பகைச்சுவை இல்லை என்று சமாளித்துவிட்டார். இதற்கு பின்னணியில் அமைச்சர் துரைமுருகனை அழைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாகவும் அதன்பிறகு அவர் சமாதானமாகி ரஜினி குறித்து விமர்சிப்பதை நிறுத்திவிட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.





