தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் இப்போது சினிமாவை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தேர்தல் களத்தில் இருந்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலில் விஜய்தான் வெற்றியாளர். அடுத்த தமிழக முதல்வர் அவர்தான் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் விஜய் மனைவி சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த பிப்ரவரி 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறார். அதுதொடர்பான வழக்கு விசாரணை வருகிற 20ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு நடிகர் விஜய் கோர்ட்டில் நேரில் வந்து ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில்தான் நடிகர் விஜய் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவான சிம்கா படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. சில மாதங்களுக்கு முன்பே இந்த படம் ரிலீஸ்க்கு தயாரான நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
சிம்கா படத்தை இயக்கியதற்காக இயக்குனர் ஜேசன் சஞ்சய் இதுவரை சம்பளம் வாங்கவில்லை. 8 கோடி ரூபாய் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வழங்கப்பட்டால்தான் இந்த படம் ரிலீஸ் தேதி உறுதியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கிய சிம்கா படத்தின் ஓடிடி உரிமத்தை அதாவது டிஜிட்டல் ரைட்ஸை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம்தான் 8 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் இதுவரை அந்த தொகையை தயாரிப்பு நிறுவனத்திடம் வழங்கவில்லை. அதன்காரணமாக தான் இந்த படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் கால தாமதம் நீடிப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.





