நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
படம் ரிலீஸான முதல் நாளில் தி கோட் படம் மொத்தம் 126 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூலித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 38.3 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் முதல் நாளிலேயே 148 கோடி ரூபாய் வசூலித்திருந்த நிலையில், தி கோட் படம் லியோ படம் முதல் நாள் வசூலில் தோற்றுவிட்டதாக விமர்சனம் எழுந்தது.
அப்பா, மகன் கதை, மகனை வில்லன் கடத்திச் சென்று வளர்த்து, இறுதியில் மகனே அப்பாவுக்கு எதிராக வில்லனாக வரும் கதை என்பதெல்லாம் 1980களில் வந்த திரைக்கதை என்று பலரும் எதிர்மறையாக விமர்சித்தனர். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ராஜதுரை படத்தின் கதையை காப்பியடித்து விட்டதாக வெங்கட்பிரபு மீது குற்றச்சாட்டு எழுந்தது.
தி கோட் படம் வெளியாகி 9 நாட்கள் ஆன நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் மொத்தம் 348 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தி கோட் இந்தியில் படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது. அதே போல் தெலுங்கில் தி கோட் படத்தை வெளியீடு செய்தவர்களுக்கு ரூ. 13 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தி கோட் படம் குறித்த சில முக்கிய தகவல்களை மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார். ஜெ பிஸ்மி கூறுகையில், தி கோட் படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை எட்டவில்லை என்றாலும், போதிய லாபத்தை தந்திருக்கிறது என்பதும் உண்மை.
இதுவரை தமிழ்நாட்டில் தி கோட் படம் ரூ. 140 கோடி வரை வசூலித்துள்ளது. அதே போல் மொத்தம் 80 லட்சம் பேர் தி கோட் படத்தை பார்த்துள்ளனர். இது மற்ற படங்களுடன் ஒப்பிடும் போது, விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிதான், என்று அந்த வீடியோ பிஸ்மி கூறியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் டிக்கெட் கட்டணம் ரூ. 190ல் இருந்து 120 ரூபாயாக இன்னும் பல தியேட்டர்களில் குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.





