2 பாயிண்ட் ஓ திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்திற்கு வெளிவந்த எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் போகவில்லை. குறிப்பாக முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த தர்பார் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மும்பையை கதைக்களமாகக் கொண்டு போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார்.
ஆனால் முருகதாஸின் ட்ரேட் மார்க் என்று சொல்லக்கூடிய எந்த ஒரு காட்சியும் அந்த படத்தில் இல்லை. இதன் பிறகு ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா ரஜினி வைத்து இயக்கியிருந்த அந்த திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
மிகவும் தொய்வான கதை, அழுத்தம் இல்லாத திரைக்கதை போன்ற காரணங்களால் அண்ணாத்த திரைப்படம் எடுபடவில்லை. இதனால் கடும் அப்செட்டில் இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த சமயத்தில்தான் நெல்சன் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்தார்.
ஜெயிலராக உருவாகிய இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. கதையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், சில முக்கியமான மாஸ் காட்சிகளை வைத்ததன் மூலம் ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ருசித்தது. ரஜினிக்கென சில மாஸ் காட்சிகள், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன் லாலுக்கும் தரமான காட்சிகளை நெல்சன் வைத்திருந்தார்.
தமன்னாவின் காவாலயா பாடலும் மிகப் பெரிய ஹிட் அளிக்க, ஜெயிலர் திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் திருவிழா கோலம் பூண்டன. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திரைப்படம் வசூல் செய்தது. படம் கொடுத்த அதிகப்படியான லாபத்தால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த் நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரினை பரிசாக வழங்கினார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் நெல்சன். இது குறித்து அவர் பொது இடங்களில் எந்த இடத்திலும் பேசவில்லை என்றாலும், படம் பற்றிய தகவலை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் யோகி பாபு. கோலமாவு கோகிலாவிலிருந்து அவருடன் பயணிப்பதாக தெரிவித்திருக்கும் யோகி பாபு, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் இருப்பதாகவும், இது தொடர்பான கதையை நெல்சன் எழுதி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.





