இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கோட். கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. விஜய் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படம் ரூ. 450 கோடிக்கு மேல் உலகளவில் வசூலித்தது.
இதையடுத்து கடந்த தீபாவளி பண்டிகையன்று வெளியான படம் அமரன். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வரை வசூலித்தது.
இந்நிலையில், விஜய் நடித்த தி கோட் படத்தை, சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் முந்தி விட்டதாகவும், விஜயை ஓவர்டேக் செய்து சிவகார்த்திகேயன் வெற்றி பெற்று விட்டார் என்றும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் உண்மை நிலவரம் என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, தி கோட் படம் ரூ. 450 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலித்தது. அதே போல் அமரன் படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதனால் இந்த வகையில் அமரன் படம், தி கோட் படத்தை முந்தவில்லை என்பதுதான் சரியானது.
ஆனால் தமிழ்நாட்டில் தி கோட் படத்தை பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை மொத்தம் ஒரு கோடியே 3 லட்சம் பேர். ஆனால் அமரன் படத்தை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சம் பேர். அந்த வகையில் தி கோட் படத்தை விட அமரன் படத்தை 13 லட்சம் பேர் அதிகமாக தமிழ்நாட்டில் அதிகமாக பார்த்துள்ளனர். இதுதான் உண்மை நிலவரமாக உள்ளது.
தி கோட் படம் ரிலீஸான போது டிக்கெட் விலை துவக்கத்தில் அதிகமாக இருந்து பிறகு குறைக்கப்பட்டது. தியேட்டர்களில் படம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே ஓடியது. ஆனால் அமரன் படம் ஆரம்பத்தில் இருந்தே ஒரே விலையில் டிக்கெட் கட்டணம் இருந்தது. 4 வாரங்களுக்கு மேல் தியேட்டர்களில் படம் ஓடியது. அதன்காரணமாக தான், தமிழ்நாட்டில் அமரன் படம் பார்த்த பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த வகையில் அமரன் படம், தி கோட் படத்தை முந்தியுள்ளது. மற்றபடி விஜயை சிவகார்த்திகேயன் முந்தவில்லை என்று பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.





