நடிகர் அஜீத்குமார், அல்டிமேட் ஸ்டார் என, துவக்கத்தில் அழைக்கப்பட்டார். தீனா படத்தில் நடித்த போது, இவருக்கு தல என்ற சிறப்பு பட்டப் பெயர், ரசிகர்களால் கிடைத்தது. படத்தில் ஒரு காட்சியில் மகாநதி சங்கர், அஜீத்தை தல என அழைப்பார். அது பிடித்துப் போனதால், பல ஆண்டுகளுக்கு அந்த பெயரே அஜீத் குமாருக்கு நீடித்தது.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், அஜீத் குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், அஜீத்குமார் என பெயர் சொல்லியோ, ஏகே என்றோ இனிமேல் சொல்லுங்கள். தல, அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப் பெயர்களே வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் படத்தின் டைட்டில்களில் கூட இந்த பட்ட பெயர்கள் வருவதில்லை.
ஆனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்று ஒரு தல உண்டு. அவர்தான், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டனாக, தொடர்ந்து வெற்றிக்கோப்பைகளை பெற்று தந்து வருகிறார். அவரை தான் இப்போது அனைவருமே தல என அன்போடு அழைக்கின்றனர்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி, சினிமா தயாரிப்பாளராக மாறி, எல்ஜிஎம் என்ற ஒரு படத்தை எடுத்தார். ஆனால், அந்த படம் வந்த சுவடே தமிழ் சினிமாவில் தெரியவில்லை. படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் படுதோல்வி அடைந்து, படத்தை தயாரித்த தோனிக்கு பலத்த நஷ்டத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
தோனியின் எல்ஜிஎம் படம் வெளியாகி சில மாதங்கள் ஆன நிலையில், இன்னும் படத்தில் நடித்தவர்களுக்கு சம்பளம் முழுமையாக வந்து சேரவில்லை. அந்த வகையில் படத்தின் நாயகன் ஐஸ்கணேஷ் என்பவருக்கு 13 லட்சம் ரூபாய், படத்தின் நாயகி இவானாவுக்கு ரூ. 6 லட்சம் என பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் அம்மா கேரக்டரில் நடித்த நதியாவுக்கு இருந்த சம்பள பாக்கியும் சமீபத்தில்தான் ஷெட்டில் செய்யப்பட்டுள்ளது.
தோனியை பொருத்த வரை, இதுபோன்ற புகார்களுக்கு எல்லாம் இடமளிக்காமல் சரியாக செயல்படுபவர். சிறந்த மனிதர். எனவே, இப்படி தனது தயாரிப்பில் வெளிவந்த படத்தில் நடித்தவர்களுக்கு நிச்சயம் அவர் சம்பள பாக்கி வைத்திருக்க வாய்ப்பில்லை. அவர் இந்த பொறுப்பை ஒப்படைத்த சிலர் செய்ய தவறுகளால், தாமதத்தால் அவரது மீது இப்படி ஒரு தவறான புகார் வந்துள்ளது என்று தோனியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





