நடிகை சாய் தன்ஷிகா, தமிழில் இயக்குனர் ஜெகனாதன் இயக்கிய பேராண்மை என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். என்சிசி மாணவிகளான 5 பேர், ஜெயம் ரவியுடன் வனாந்திர காட்டுக்குள் சென்று வெளிநாட்டு தீவிரவாதிகளின் சதியை முறியடித்து, அவர்கள் நாட்டுக்கு செய்யும் தீவிரவாத செயலை தடுப்பதுதான் இந்த படத்தின் மையக்கதை.
இந்த படத்தில் சாய் தன்ஷிகா கல்லூரி மாணவியாக மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்திலும், தேயிலை தோட்ட தொழிலாளியாக சாய் தன்ஷிகாவின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.
அடுத்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக சாய் தன்ஷிகா சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவர் சண்டைக் காட்சிகளிலும் அதிரடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தமிழில் மட்டுமின்றி தற்போது தெலுங்கிலும் சாய் தன்ஷிகா நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சாய் தன்ஷிகா குறித்து அவரது முன்னாள் மேனேஜர் ப்ரியா என்பவர், தற்போது அவரது எக்ஸ் பக்கத்தில் புகார் ஒன்றை கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது, சாய் தன்ஷிகா மற்றும் இசையமைப்பாளர் அம்ரீஷ் மனைவி கீர்த்தி அனுஷா ஆகியோர், பணம் சொத்து இருப்பவர்களை குறி வைத்து பின் தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என பிரியா, நடிகை சாய் தன்ஷிகா குறித்து புகார் கூறியுள்ளார்.
மேலும், இதற்காக பிரியாவின் பெற்றோரை சாய் தன்ஷிகா மிரட்டி வருவதால் சாய் தன்ஷிகாவை கைது செய்ய வேண்டும் எனவும் பிரியா அந்த எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு இருக்கிறார். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இளம் நடிகை குறித்து இப்படி குற்றச்சாட்டு கிளம்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு நடிகை சாய் தன்ஷிகா விளக்கம் கொடுத்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டில், தன்னிடம் மேனேஜராக இருந்த பிரியாவை நீக்கிவிட்டதாகவும், அவர் சொல்லும் நபர்கள் யார் என்றுகூட எனக்கு தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோல் அவர் தொடர்ந்து என் மீது சர்ச்சைக்குரிய புகார்களை பதிவிட்டால், சட்டப்படி சந்திப்பேன் என்றும் சாய் தன்ஷிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





