சினிமாவில் நடித்து பெயரும், புகழும் சம்பாதிப்பவர்கள், அடுத்த இலக்காக, அரசியலை குறிவைக்கின்றனர். ஏனெனில், சினிமாவில் மார்க்கெட் இருக்கும்வரை மட்டுமே, படங்களில் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு தரும். அதுவும் குறிப்பாக நடிகைகளுக்கு அழகும், இளமையும் இருக்கும் வரை மட்டுமே தொடர்ந்து, கால்ஷீட் கேட்டு இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் வீடு தேடி வருவார்கள். மவுசு குறைந்தால், மார்க்கெட் காணாமல் போய்விடும்.
ஆனால், இதில் நடிகர்கள் விதிவிலக்காக தான் இருக்கின்றனர். பல நடிகர்கள் 60, 70 வயதுகளை கடந்தும், இன்னும் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். அவர்களுடன் ஜோடி போட்டு ஆடிய பல ஹீரோயின்கள், இன்று டிவி சீரியல்களில் அம்மா, அத்தை, வில்லி கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
தமிழில் செம்பருத்தி படம் மூலம், அறிமுகமானவர் ரோஜா. ஆந்திராவைச் சேர்ந்தவர், இயக்குநர் ஆர்.கே செல்வமணியின் மனைவி. தமிழில் பல படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரோஜா, முன்னணி நடிகர்களுடன் நடித்தார். அதுமட்டுமின்றி, சில படங்களில் பாடல் காட்சிகளில் மட்டும் நடனமாடியும் ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆர்கே செல்வமணியை, ரோஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு, ஆந்திர அரசியலில் குதித்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இப்போது ஆளுங்கட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக ரோஜா இருக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான, முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்ய நாராயணமூர்த்தி, நடிகை ரோஜா குறித்து தவறாக பேசியுள்ளார். அவர் ஆபாச படங்களில், ஆடையின்றி நடித்தவர் என்றும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா, இதுபோன்ற மிக மோசமான பேச்சால், நான் சித்ரவதைப்படுகிறேன். என்னை மதிப்பிட இவர்கள் யார் என்று கேட்கிறேன். பெண்களை, விளையாட்டு பொருளாக தெலுங்கு தேசம் கட்சியினர் நினைக்கின்றனர். அரசியலை, பெண்களை இழிவாக பேச பயன்படுத்தாதீர்கள். தொடர்ந்து இப்படி என்னைப் பற்றி அவதூறாக பேசி வரும் பண்டாரு சத்ய நாராயணமூர்த்தி மான நஷ்ட வழக்கு தொடருவேன், என அழுதபடி தெரிவித்துள்ளார் நடிகை ரோஜா.





