தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், ரசிகர்கள் மத்தியில் போதிய அறிமுகம் பெறாத நடிகர், நடிகையர் பலர் இருக்கின்றனர். உதாரணமாக நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்த பல துணை நடிகர், துணை நடிகையர் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர்கள். அதில் அல்வா வாசு, பாவா லட்சுமணன் தவிர்த்து, பலரது பேர் பலருக்கும் தெரியாது.
ஆனால், ஒரே படத்தில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுவிடும் நடிகர், நடிகையர் பல பேர் உள்ளனர். ஒரே காட்சியில் வந்தாலும், அவர்களது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். முதல் மரியாதை படத்தில், சிவாஜி மனைவி (வடிவுக்கரசி) பொன்னாத்தாளை தேடி வரும் மயில்வாகனன் (சத்யராஜ்) ஒரே காட்சியில் வந்தாலும், ரசிகர்களின் மனதை வென்றுவிடுவார்.
அப்படி ஒரே படத்தில், ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்தான் நடிகை இவானா. லவ்டுடே படத்தில், உத்தமன் பிரதீப்பின் காதலியாக, நிகிதா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். காதலன், காதலி இருவரும் தங்களது போன்களை ஒரு நாள் மாற்றிக்கொள்வதுதான் படத்தின் வித்தியாசமான மையக்கரு.
இதில் மாமாகுட்டி என்ற ஆண் நண்பருடன் நிகிதா பேஸ்புக் நட்பு கொண்டிருப்பார். வாட்ஸப் செய்வார். அதையறிந்து பிரதீப், பயங்கர டென்சனாகி, ஒரு கட்டத்தில் இருவரது காதலும் முறிந்துபோகும் நிலை ஏற்படும். இந்த படத்தில், ஒரு காதலியாக நல்ல நடிப்பை தந்து, அசத்தி இருந்தார் இவானா.
இந்த படத்துக்கு முன்பே, ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்த நாச்சியார் என்ற படத்தில், வீட்டு வேலை செய்யும் டீன் ஏஜ் வேலைக்கார பெண்ணாக, இவானா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜேவி பிரகாஷ் குமார் நடித்திருந்தார். நல்ல கதையம்சம் உள்ள இந்த படமும் இவானாவுக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில், விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அப்பா, மகன் என்ற இரண்டு கேரக்டரில் விஜய் நடித்து வருகிறார். இதில் மகனாக நடிக்கும் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் ஒரு கேரக்டர் உள்ளது. படத்தில், இந்த கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிக்க அதிகமான ஸ்கோப் உள்ளது.இந்த கேரக்டரில் நடிக்க இப்போது இவானாவிடம் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. விரைவில் அறிவிப்பு வரும்.





