தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர். பார்த்திபன். ஆரம்பத்தில் இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆர் பார்த்திபன், கடந்த 1990களில் புதிய பாதை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஏற்கனவே தாவணிக்கனவுகள் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன், கே. பாக்யராஜ் இயக்கத்தில் பார்த்திபன் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பாதை படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்ற நிலையில், பார்த்திபன் முதல் படத்திலேயே சிறந்த இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார். புதிய பாதை படத்தில் தனது ஜோடியாக நடித்த நடிகை சீதாவையே அவர் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.
தொடர்ந்து சினிமாவில் இயக்குனராக பயணித்த பார்த்திபன், சில படங்களை இயக்கினார். அதில் சுகமான சுமைகள், பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே உள்ளிட்ட சில படங்கள் கவனிக்கப்பட்ட படங்களாக இருந்தன. இதைத் தொடர்ந்து அவர் முழு நேர நடிகராக மாறி அவ்வப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். இப்போதும் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் நடிகர் பார்த்திபன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் குழந்தைகளை மையமாகக் கொண்டு டீன்ஸ் என்ற சாகசகங்கள் நிறைந்த ஒரு படத்தை தயாரித்து, இயக்கியிருந்தார். வெற்றிப் படமாக இது அமைந்தது. அதேபோல் ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்யாசமான படங்களும் பார்த்திபன் இயக்கத்தில் பெரிய வரவேற்பு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் வந்தே பாரத் ரயிலில் பயணித்திருக்கிறார். அது குறித்த ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்கிய கேடு என சுற்றத்தார் மனு கொடுத்தார்கள். அதனால் நான் புகார் புத்தகத்தை வாங்கி அதில் சில கிறுக்கல்களை எழுதிக் கொடுத்தேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும் செல்பவர்கள் பயன் முக்கியம் என்று கம்ப்ளைன்ட் புக்கில் எழுதிய புகைப்படத்தை பார்த்திபன் தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
மேலும் அந்த புகாரில், உணவு பரிமாறியவர்கள் சிறப்பாகதான் செய்தனர். ரயில் மிகவும் சுகாதாரமாக தான் இருந்தது. ஆனால் இரவு 7 22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம் என்று அந்த பதிவில் பார்த்திபன் எழுதியிருந்தார். நடிகர் பார்த்திபனின் புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபனின் புகார் எதிரொலியாக, அந்த உணவு வழங்கும் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





