கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கு இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக அவர் மாறினார்.
அதன்பிறகு தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து தனது 2வது சுற்றை தமிழில் ஆரம்பித்தார். இப்போது ரெட்ரோ காஞ்சனா 4 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே கூலி படத்திலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். தொடர்ந்து தமிழில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிகின்றன.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே கூறியதாவது, என்னைப் பற்றிய ட்ரோல்களை பார்க்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம்ஸ் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த காலம் இருந்தது. அவர்கள் ஏன் என்னைப் பற்றி தொடர்ந்து நெகட்டிவிட்டி பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன்.
அதுவும் என்னை சரியாக டார்க்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன். மற்றவர்களை குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்று பின்னர் எனக்கு புரிந்தது. அதை நான் அறிந்தபோது என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம். ஆனால் நான் அதை ஒரு பெருமையாக எடுத்துக் கொண்டேன்.
ஏனென்றால் யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால் நீங்கள் அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அது அதிகமாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள் என்பதை நான் கண்டுபிடித்தேன். பின்னர் என்னை ட்ரோல் செய்யும் மீம்ஸ் பக்கங்களை தொடர்பு கொண்டு பிரச்சனை என்னவென்று அவர்களிடம் விசாரிக்கும்படி என் குழுவிடம் சொன்னேன்.
அவர்கள் சொன்ன பதில் நேரடியாக இருந்தது. உங்களை ட்ரோல் செய்ய எங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இனி இதை நிறுத்தவோ அல்லது அந்த அணியை திருப்பி ட்ரோல் செய்யவோ நீங்கள் எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்கிறார்கள். அது மிகவும் விசித்திரமாக இருந்தது. ஆனால் என்னை ஏன் ட்ரோல் செய்கிறார்கள் அல்லது அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை என்று நடிகை பூஜா ஹெக்டே ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





