நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து பின் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நாயகனாக மாறியவர். புதுப்பேட்டை, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அப்போது அவர் அதிக பரிச்சயமில்லை.
ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் கிடைத்தது.
கதாநாயகனாக தொடர்ந்து கருப்பன், தர்மதுரை, சேதுபதி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய கவனத்தை பெற்ற விஜய் சேதுபதி பிறகு விஜய், ரஜினி, கமல் போன்றவர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். கேமியோ ரோல், கெஸ்ட் ரோல் என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரது படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாமல் போன நிலையில், இப்போது வெளியான அவரது 50வது படம் மகாராஜா, மீண்டும் அவருக்கு பழைய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்துள்ளது. அவருக்கு கம்பேக் படமாக மகாராஜா அமைந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் அவரது டிரெயின் படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத். இவர் கடந்த 2021ம் ஆண்டில், தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், நடிகர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து தவறாக பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தேவர் ஐயாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பருக்கு ரொக்கப் பரிசு ரூ. 1001 வழங்கப்படும் எனவும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவு விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில், சமூக வலைதளங்களில் பரவி கொந்தளிப்பையும் பெரிய ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் அர்ஜூன் சம்பத் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அர்ஜூன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.





