பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3 படங்களை இப்போது இயக்கி வருகிறார். இதற்கிடையே பல மாதங்களாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தையும் இயக்கி வருகிறார். இதில் கியாரே அத்வானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
கேம் சேஞ்சர் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு அந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தியன், கேம்சேஞ்சர் 2 படங்களின் படப்பிடிப்புகளையும் மாறி மாறி கவனித்து வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
இதற்கிடையே கடந்த 22ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் ஆகியோர் கலந்துக்கொண்டனர். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த விழாவில் முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரன்வீர் கபூர், ஆலியா பட், மாதுரி தீக்ஷித், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல பிரபல நடிகர், நடிகையர் பங்கேற்றனர்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம்சரண், இயக்குநர் ஷங்கரை அழைத்து புதிதாக ஒரு கண்டிசனை போட்டுள்ளார். அதாவது கேம் சேஞ்சர் படத்தில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசை விமர்சித்தோ, அல்லது பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளோ இந்த கேம் சேஞ்சர் படத்தில் இடம்பெறக் கூடாது. எந்த கேரக்டரும் இப்படி ஒரு விஷயத்தை பேசிவிடாமல், இயக்குநராக நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதை ஏற்றுக் கொண்ட இயக்குநர் ஷங்கர், பதிலுக்கு ராம் சரணுக்கு அவரும் ஒரு கண்டிசனை போட்டிருக்கிறார். அதாவது, கேம் சேஞ்சர் படம் பார்லிமென்ட் எலக்சனுக்கு பிறகுதான் வெளியாகிறது. ஒருவேளை தேர்தலின் போது ஏதேனும் பரபரப்பான விஷயங்கள் நடந்தால், அதை நமது கேம் சேஞ்சர் படத்தில் சேர்க்க வேண்டும். எனவே, அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் நீங்கள் 5 நாள் கால்ஷீட் ஒதுக்கித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு ராம்சரணும் ஓகே சொல்லி இருக்கிறார்.
இந்தமுறை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகள், பார்லிமென்ட் தேர்தலில் மோதுகின்றன. ஒருவேளை அந்த கட்சிகள் பாஜகவுக்கு எதிரான வெற்றியை பெறலாம். அல்லது மீண்டும் பாஜகவே வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்கலாம். 3வது முறையாக பாரத பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் ஆட்சியில் அமரலாம். ஆனால் விஷயம் பரபரப்பாக இருக்கும் பட்சத்தில் அது யாருக்கு எதிரானதாக இருந்தாலும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நடித்தாக வேண்டிய நிர்பந்தத்தை ஷங்கர் ஏற்படுத்தி இருக்கிறார். அது தெரியாமல், தன் முதல் கண்டிசனுக்கு ஓகே சொன்னதால், ராம்சரண் ஷங்கரின் வில்லங்கமான கண்டிசனுக்கு ஒத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.





