இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த 1987ம் ஆண்டில் வெளியான படம் நாயகன். அந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்த கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் நடிகை சரண்யா பொன்வண்ணன் அறிமுகமானார். மும்பை தாதா வரதராஜன் கதையை மையப்படுத்தி இந்த நாயகன் உருவாக்கப்பட்டார்.
மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கிய மணிரத்னமும், அந்த படத்தில் நடித்த கமல்ஹாசனும் அதற்கு பிறகு 36 ஆண்டுகளாக மீண்டும் இணைந்து படம் செய்யவில்லை. இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் வெற்றிப் பட இயக்குனர் – நடிகர் ஹீரோ மீண்டும் இணைந்து கூட்டணி அமைத்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தருவதுதான் வழக்கம்.
ஆனால் கமல் – மணிரத்னம் 36 ஆண்டுகளாக இணையவில்லை. இப்போது பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இருவரும் சந்தித்த பிறகுதான், தக்லைப் படத்தில் இணைவதற்கான சூழல் உருவானது. ஆனால் இப்போதும் அவர்கள் மீண்டும் இணைந்து பணிபுரிவதற்கான சாத்தியக்கூறுகளில் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் நடிகர் கமல்ஹாசன், எந்த டைரக்டர் கதை சொன்னாலும் அது உண்மை கதையா, வேறு படங்களில் இருந்து காப்பியடித்த கதையா என்பதை கண்டுபிடித்து விடுவார். அதுமட்டுமின்றி கதையில் நிறைய திருத்தங்கள், மாற்றங்கள் சொல்வது கமலின் வழக்கம். ஏனெனில் அவரும் டைரக்டர், கதாசிரியர் என்ற நிலைகளில் இருந்தவர். இருப்பவர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.
இந்நிலையில் தக்லைப் படம் குறித்த கதை விவாதத்தில் மணிரத்னத்துடன் நடிகர் கமலும் பங்கேற்று இருக்கிறார். வழக்கம்போல அவரும் தனது பங்குக்கு கதையில், திரைக்கதையில், காட்சிகளில் திருத்தங்களும், மாற்றங்களும் சொல்லி இருக்கிறார். இந்தியாவின் சிறந்த இயக்குனர் என தன்னை நினைத்துக்கொண்டு இருக்கும் மணிரத்னம், ஒரு கட்டத்தில் கடுப்பாகி விட்டாராம்.
அவர் கடுப்பானதை பார்த்து எரிச்சலடைந்த கமல்ஹாசன், தேர்தல் முடியும் வரை என்னால் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாது எனவும் ஒரே போடாக போட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி சிம்பு வேண்டாம் என்று கமல் கூறியும், மணிரத்னம் அவர் பேச்சை மீறி சிம்புவை தக்லைப் படத்துக்குள் கொண்டு வந்ததும் கமலுக்கு மேலும் கடுப்பை கிளப்பியிருக்கிறது. அதனால் 36 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கைகள், ஏன் நாயனுக்கு பிறகு இத்தனை ஆண்டுகளாக இணையாமல் தவிர்த்தது என்ற கேள்விக்கும் பதில் கிடைத்திருக்கிறது.





