நடிகர் விஜய், கடந்த 2ம் தேதி திடீரென தனது கட்சி பெயரை அறிவித்து ஒரு அறிக்கை வௌியிட்டார். அதில் தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சிக்கு பெயர் வைத்திருப்பதாகவும், அதை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் எனது இலக்கு அல்ல; வருகிற சட்டசபை தேர்தல்தான் என்னுடைய இலக்கு. அதில்தான் என் கவனம் முழுவதும் இருக்கிறது. இந்த 2024 நாடாளுமன்ற தேர்தலை பொருத்த வரை யாருக்கும் ஆதரவும் இல்லை. போட்டியிடவும் இல்லை என்றும் தெரிவித்து விட்டார்.
தமிழக அரசியலில் இப்படி திடீரென விஜய் பிரவேசம் இருக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் தரப்பில் மட்டுமே, விஜய் அரசியலுக்கு வருவார், வருகிறார் என கூறிக்கொண்டிருந்த நிலையில் விஜய் எதையுமே வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் உள்ளூர பல ஆண்டுகளாக அவர் இதற்கான திட்டமிடலில் இருந்திருப்பது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி துவங்கியிருப்பதை ஒரு சிலர் எதிர் விமர்சனம் செய்தாலும் பொதுவாக சகல தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு தான் கிடைத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் யார் வந்தாலும், அதை ஏற்கலாம். வரவேற்கலாம். அதில் எந்த தவறும் இல்லை என்றுதான் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகம் ஏற்கனவே பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதாவது தளபதி வெற்றி கழகம் என்பதையே தமிழக வெற்றி கழகம் என வைத்துள்ளனர். மேலும் தமிழக என்பது தமிழ்நாடு என வந்திருக்க வேண்டும். வெற்றி கழகம் என்பதை வெற்றிக்கழகம் என்று குறிப்பிட வேண்டும், க் என்ற எழுத்து விடுபட்டுள்ளது என்று கூறி விமர்சித்து வருகி்னறனர்.
இப்போது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேறு ஒரு புதிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார். அதாவது எங்களது தமிழக வாழ்வுரிமை கட்சியை TVK என்று குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறோம். எனவே, விஜய் கட்சி பெயரும் TVK என இருந்தால் மக்களுக்கு குழப்பம் ஏற்படும். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம், என்று கூறியிருப்பது, விஜய் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





