தமிழ் சினிமாவில் எப்போதுமே வியாபார ரீதியாக கணிசமான லாபம் தரும் பெரிய நட்சத்திர ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவதில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் டாப் ஸ்டார் நடிகர் அஜீத்குமார் படங்களை தயாரிக்க, இயக்க கடும் போட்டி தமிழ் சினிமாவில் நிலவுகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை விடாமுயற்சி படம் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அஜீத்குமார் நடித்த அடுத்த படம் குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி அந்த படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற பலத்த கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் வெங்கட்பிரபு மகிழ் திருமேனி பெயர்கள் பட்டியலில் உள்ள நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் தனுஷ் பெயர்களும் உள்ளன.
இப்போது நடிகர் அஜீத்குமார் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி முதல் வருகிற அக்டோபர் வரை தொடர்ந்து 10 நாடுகளில் நடக்கும் இந்த கார் பந்தயங்களில் பங்கேற்கும் அஜீத்குமார், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை வரும் நவம்பரில் துவங்கி 2026 மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்.
அதனால் அவரது அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே 4 படங்களை இயக்கி உள்ள நடிகர் தனுஷ், நடிகர் அஜீத்குமாரிடம் ஒரு கதை சொல்லி அவரும் ஓகே சொல்லி விட்டார். மு ஸ்கிரிப்ட் ரெடி செய்யுங்கள் என்று அஜீத்குமார், தனுஷிடம் உத்தரவாதமும் தந்திருக்கிறார்.
அதே நேரத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பின் போதே, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இன்னொரு கதையும் அஜீத்குமாரிடம் சொல்லி அவரும் ஓகே சொல்லி விட்டார். எப்போதுமே தனக்கு சூப்பர் ஹிட் படம் தரும் இயக்குனருக்கு தனது 2வது படத்தையும் டைரக்ட் செய்ய வாய்ப்பளிப்பது அஜீத்குமாரின் பழக்கம். அதனால் குட் பேட் அக்லி மாஸ் ஹிட் கொடுத்தால் அஜீத்குமார் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தனது அடுத்த படத்தை தருவாரா, அல்லது நடிகர் தனுஷூக்கு வாய்ப்பு தருவாரா என்பதில் பெரிய குழப்பம் நிலவுகிறது.





