கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்கிய நிலையில் இப்போது 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பிரஜின் சான்ட்ரா திவ்யா கணேஷ் அமித் கானா வினோத் பார்வதி கம்ருதீன் அரோரா ரம்யா கனி எப்ஜே வியானா விக்ரம் சுபிக்ஷா உள்ளிட்டோர் இருந்த நிலையில் வைல்டு கார்டு போட்டியாளராக ஆதிரை வீட்டுக்குள் வந்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9 துவங்கியது முதலே தொடர்ந்து பல விமர்சனங்களை சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற வார்த்தைகளும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன. கேமராக்கள் தங்களை கண்காணித்து கொண்டிருப்பதை மறந்து அவர்கள் அநாகரிகமாக நடந்துக் கொள்கின்றனர்.
குறிப்பாக பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறைகளை மீறுகின்றனர். பல நேரங்களில் அவர்கள் தோளில் இருக்கும் மைக்குகளை கழட்டி வைத்து விடுகின்றனர். கம்ருதீன் பார்வதி போன்றவர்கள் மைக்குகளை கையால் மூடிக்கொண்டு ரகசியம் பேசுகின்றனர். இதுகுறித்து அடிக்கடி பிக்பாஸ் அழைத்து கண்டித்தாலும் அவர்கள் அதை கண்டுகொள்வது இல்லை.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் தொகுப்பாளராக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை சந்திக்கும் விஜய் சேதுபதி, பலமுறை அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். பிக்பாஸ் சொல்லும் விதிமுறைகளை பின்பற்றி நடக்கவும் அவரை மதித்து நடக்கவும் அறிவுறுத்துகிறார். ஆனால் அதை எல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் அப்போதே காற்றில் பறக்க விட்டு விடுகின்றனர்.
கடந்த வாரம் போட்டியாளர் யாரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை. அதனால் இந்த முறை ஒருவர் அல்லது இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் பார்வையாளர்களிடம் அதிக அதிருப்தியை சம்பாதித்து வருவது ஆர்ஜே பார்வதி மற்றும் கம்ருதீன்தான். அவர்களை எலிமினேட் செய்தால் நல்லது என்று பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் ஓட்டுகளின் அடிப்படையில் மட்டுமே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதால் இதுவரை கனி மற்றும் எப்ஜே போன்றவர்கள் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதால் அவர்களை வெளியேற்றவும் வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. எனினும் யார் வெளியேற்றம் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடைசி நேரத்தில் யார் வேண்டுமானாலும் வெளியேற வாய்ப்புள்ளது. பிக்பாஸ் சிலர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதால் அதிரடி முடிவு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.





