கடந்த 9 ஆண்டுகளாக விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 7 ஆண்டுகள் நடிகர் கமல்ஹாசனும் அதற்கு பின் நடிகர் விஜய் சேதுபதி 2 ஆண்டுகளாகவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 10 வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல் துவங்கி 100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சி துவங்கி இது 10ம் ஆண்டு என்பதால் இந்த ஆண்டு புதிய முயற்சியாக தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்களில் சிலரை இந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிர்வாகிகள் திட்டமிட்டனர். அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சி ஒன்றும் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 10ல் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் சில போட்டியாளர்கள் பெயர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது முக்கியமான இரண்டு போட்டியாளர்கள் குறித்த ஒரு தகவல் கசிந்துள்ளது. அதன்படி டிவி சீரியல் நடிகை ஆலியா மானசா பிக்பாஸ் சீசன் 10ல் ஒரு போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆலியா மானசா அந்த தொடரில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் பிக்பாஸ் சீசன் 10ல் போட்டியாளராக ஆலியா மானசா பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரது கணவர் நடிகர் சஞ்சீவ் பெயர் இப்போதைக்கு இல்லை என்று கூறுகிறார்கள். அதேபோல் பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக கிரிக்கெட் வீரர் ஒருவரும் பிக்பாஸ் போட்டியில் கலந்துக்கொள்வார் என்று தகவல் கசிந்துள்ளது.
அவர் கிரிக்கெட் வீரர் முரளி விஜய். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காகவும் ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இவர் பல போட்டிகளில் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இன்னும் பல பிரபலங்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





