நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். நேர்மையான வெளிப்படையாக ஆட்சி நிர்வாகம், மக்கள் பணியே எனது லட்சியம் என்று அதில் தெரிவித்திருந்த விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு தவெக போட்டியிடும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக செயலி ஒன்றை அறிமுகப்படுத்திய விஜய், கட்சி சார்ந்து நாட்டில் எந்த பிரச்னை நடந்தாலும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதற்காக அறிக்கை வெளியிட்டு தனது கருத்தை, விமர்சனத்தை, பாராட்டை தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு கல்வி விருதுகள் வழங்கிய விழாவில் பங்கேற்ற விஜய், நீட் தேர்வு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தி கோட் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவும் மட்டுமே அவர் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு அரசியலில் முழுநேரமும் தீவிர கவனம் செலுத்துகிறார்.
இந்நிலையில் இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமை நிலைய செயலகத்தில் நடிகர் விஜய், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கட்சியினர் முன்னிலையில் உறுதிமொழி வாசித்த அவர், தனது கட்சி பாடலையும் வெளியிட்டார்.
இந்த விழாவில் நடிகர் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு மேடையில் விஜய் நன்றி சொன்னார். ஆனால் கட்சி கொடியேற்றி விட்டு விஜய் திரும்பி நடக்கும்போது அவரது அம்மா ஷோபா, விஜயின் கையை பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால் விஜய் அவர் பக்கமே திரும்பி பார்க்காமல் பேசாமல் சென்று விடுகிறார்.
இந்த காட்சி வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அம்மாவிடம் விஜய் பேசாமல் புறக்கணித்து சென்றது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் இந்த விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் விஜய், சங்கீதா பிரிவு உண்மைதான் என்றும் கூறத் துவங்கியுள்ளனர்.





