தமிழ் சினிமாவில், மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசை உலகில் அறிமுகமானவர் ஏஆர் ரகுமான். பிளஸ் 2 மாணவன் போல காட்சியளித்த அவருக்குள் இசை பிரவாகமாக வெளிப்பட்டதை பார்த்து, இசைப்புயல் என ரசிகர்களால் புகழ்ந்து அழைக்கப்பட்டார். இன்று வரை இசை உலகில் அவர் இசைப்புயலாக தான் வலம் வருகிறார்.
இசைக்கலைஞராக மட்டுமின்றி, ஒரு பாடகராகவும் பல படங்களில் அவர் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு காலகட்டத்தில், இவர் இளையராஜாவிடம் உதவியாளராக கீபோர்டு வாசித்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அப்போது சிறுவனாக இருந்திருக்கிறார். இப்போதும் அதை இளையராஜா செல்லமாக குறிப்பிட்டு பேசுவார்.
ஏஆர் ரகுமானை பொருத்த வரை, எந்த விமர்சனங்களுக்கும், சர்ச்சைக்குள்ளும் சிக்காத ஒரு மனிதராக தான், கடந்தாண்டு வரை இருந்தார். அவரை யாரும் குறை சொல்லும் அளவுக்கு, அவர் மீது சங்கடப்படும் அளவுக்கு ஒரு போதும் அவர் நடந்துக்கொண்டது இல்லை. ஆனால், இப்போது தேவையில்லாத சர்ச்சைகளில் ஏஆர் ரகுமான் அடிக்கடி சிக்கிக்கொள்கிறார்.
சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏஆர் ரகுமான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்தனர். ஆனால், சில ஆயிரம் பேர் இருக்க வேண்டிய அந்த நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் திரண்டதும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதும் கார் நிறுத்த கூட இடமின்றி, போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி தவித்ததும் பெரிய விவகாரமானது.
இவ்வளவு பெரிய இசையமைப்பாளர், தனது இசைநிகழ்ச்சியை முறையாக நடத்த தெரியாதா என பலரும், சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செய்த குளறுபடியால் ஏஆர் ரகுமானை பலரும் திட்டினர். இப்போது மிக்ஜம் புயல் ஏற்படுத்திய கனமழையால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றனர். பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலில் தவிக்கின்றனர். சென்னை மாநகரமே துயரத்தில் மூழ்கியுளளது.
இந்த சூழலில், ஏஆர் ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், தான் இசையமைக்கும் மெயின் பர்வானா என்ற படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, பிரமோ செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போய்விட்டனர். சென்னை, தமிழ், தமிழ்நாடு மக்கள் என பேசினால் மட்டும் போதாது. அவர்கள் துயரத்தில் தவிக்கும் போது அதில் பங்கேற்காமல் இப்படி பதிவிடுவது சரியா என ஏஆர் ரகுமானை வசைபாடி வருகின்றனர்.





