இப்போது, தமிழில் பல படங்கள், இரண்டாம் பாகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, இரண்டாம் பாகம் படங்கள் தயாராகி வருகின்றன. இப்படி ஒரு படத்தை, இரண்டு பாகங்களாக வெளியிடும் கலாசாரத்தை, சினிமாவில் துவங்கி வைத்த பெருமை, இயக்குநர் ராஜமவுலியையே சேரும்.
அவர்தான், முதன்முதலில் பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக தந்தார். தொடர்ந்து கேஜிஎப் இரண்டு பாகங்களாக வந்தது. அடுத்து பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வந்தது. சூர்யா நடித்த சிங்கம் 3 பாகங்களாக வந்தது, சாமி 2 பாகங்களாக வந்தது. அடுத்து இந்தியன், விடுதலை, சந்திரமுகி போன்ற படங்கள், 2 பாகங்களாக வர உள்ளன.
இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ், மாஸ் ஹீரோயிஸத்தை பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் காட்டியிருந்தார். ஆஜானுபாகுவாக தோற்றத்தில், கம்பீரமான ஒரு மன்னனாக அவரது நடிப்பு, ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது, அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலியாக அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தற்போது, கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி அருங்காட்சியகத்தில், பாகுபலி படத்தில் பிரபாஸ் நடித்த கெட்டப்பில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதை மியூசியத்துக்கு வரும் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். பாகுபலி படத்தில் இருந்த கெட்டப்பிலேயே இந்த மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று, பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் அபார வெற்றியடைந்த நிலையில், ஹீரோவில் சிலையை அகற்ற வேண்டும் என தயாரிப்பாளர் கூறியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகடா கூறுகையில், இந்த சிலை முறைப்படி உரிமம் பெற்று செய்யப்பட்டதாக இல்லை. இந்த சிலை பற்றி எங்கள் கவனத்துக்கும் வரவில்லை, எங்களிடம் அனுமதியும் பெறவில்லை. இந்த சிலையை அருங்காட்சியகத்தை விட்டு அகற்ற சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மியூசியம் தரப்பில் சிலையை அகற்ற முடிவு செய்துள்ளனர்.





