நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் 12ம் தேதி தனது 74வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அன்று, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் கூலி படத்தில் இருந்து சிக்குடு என்ற ஒரு நிமிட பாடல் காட்சி ஒன்று வெளியாகி வைரலானது.
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு சினிமா நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், நண்பர்கள், ரசிகர்கள் என பலதரப்பட்ட மக்களிடம் இருந்து ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
நேற்று ரஜினிகாந்த் வெளியிட்ட அந்த நன்றி அறிக்கையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுவானவர்கள் என்ற ரீதியில் 3 பிரிவுகளாக பிரித்து தனது நன்றிகளை அவரவர்கள் பெயருடன் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார்.
இதில் அரசியல்வாதிகள் பிரிவில், அன்புத் தம்பி விஜய் என்று குறிப்பிட்டு இருந்தார். அதே போல் திரையுலகத்தில் இருந்து நண்பர் கமல்ஹாசன் என்றும் அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம்தான் தற்போது கமல் ரசிகர்களை பலத்த கோபமடைய செய்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி துவங்கி அதன் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். மேலும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்து வருகிறார். ஆனால் கமல்ஹாசனை அரசியல்வாதி பிரிவில் சேர்க்காமல், நடிகர்கள் வரிசையில் குறிப்பிட்டு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயரை, விஜய் அறிவித்தே 10 மாதங்கள் ஆகிறது. இன்னும் அவர் ஒரு தோ்தலை கூட சந்திக்கவில்லை. பொதுமக்கள் மத்தியில் அரசியல்வாதியாக இன்னும் நேரடியாக சந்தித்து பேசவில்லை. அரசியல் மாநாடு ஒன்றை மட்டுமே நடத்தி முடித்திருக்கிறார். அப்படி இருக்கையில் விஜயை அரசியல்வாதியாக ரஜினி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத ரஜினிக்கு, கமலும் வாழ்த்து சொல்லியிருக்க கூடாது என்று கமல் ரசிகர்கள் கூறுகின்றனர்.





