மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ ஆகிய வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
கூலி படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், வரும் வாரத்தில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. இதில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமீர்கான் பங்கேற்கும் முக்கிய சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்த படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை இந்த படம் அவரது வழக்கமான ஸ்டைல், பஞ்ச் டயலாக் என ரசிகர்களுக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லாத ஒரு முழுமையான ரஜினி படமாக தருவது என்று லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார்.
ஏனெனில் இது லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல், முழுக்க முழுக்க ரஜினிகாந்த் படமாக மட்டுமே இருக்கும் என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். எனினும் இப்போது ஏஐ தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கூலி படத்திலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது.
இதனால் கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி போல் தோற்றமுள்ள 4, 5 நபர்கள் அவரது கெட்டப்பில் நடமாடுவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே தளத்தில் இருந்தால் படக்குழுவினர் அல்லது வெளியிலிருந்து வரும் சில நபர்கள், அதை வீடியோவாக புகைப்படமாக எடுத்து வெளியிட வாய்ப்புள்ளது என்பதால், இப்படி ஒரு சமயோசித வேலையை லோகேஷ் செய்திருப்பதாக தெரிகிறது.
அத்துடன் ஏஐ தொழில்நுட்பத்தில் பல காட்சிகள் உருவாக்கப்படும் படம் என்பதால், ரஜினி போன்ற டூப் நடிகர்களை வைத்து லாங் ஷாட்டில் பல காட்சிகளை எடுப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் கூலி படம் ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை, மிகப் பெரிய திருப்தியை தரக்கூடிய படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஷூட்டிங் பாட்டில் 4, 5 கெட்டப்களில் சுற்றித் திரியும் ரஜினியை பார்க்கும் படக்குழுவினரே, அவ்வப்போது தலை சுற்றிப்போய் குழப்பம் அடைகின்றனர் என்பது தான் லேட்டஸ்ட் தகவலாக வெளிவந்திருக்கிறது.





