சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் கூலி நேற்று முன்தினம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு மியூசிக் டைரக்டர் அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
குறிப்பாக கதை திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பலாக உள்ளது. நாகர்ஜூனா உபேந்திரா அமீர்கான் போன்றவர்கள் படத்தில் இருந்தும் அவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயக்குனர் தவறி விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. படம் முழுக்க பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதும் படத்தை கடும் விமர்சனத்தில் தள்ளியுள்ளது.
அதிலும் நடிகர் ரஜினியின் நண்பராக நடித்துள்ள சத்யராஜ் கேரக்டர் ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்புகிறது. சாதாரண கூலியாக இருந்த அவர், எப்படி சயின்டிஸ்ட் ஆக மாறினார் என்பதும் ரஜினியின் மகள் ஸ்ருதிஹாசனை அவர் ஏன் ரஜினிக்கு தெரியாமல் தனது மகளாக வளர்க்கிறார் என்பதற்கும் படத்தில் பதில் இல்லை.
அதே போல் ஸ்ருதிஹாசன் தனது மகள் என தெரிந்த பிறகும் ரஜினி ஏன் அதை ஸ்ருதியிடம் மறைக்கிறார் என்பதற்கும் படத்தில் காரணம் இல்லை. சாதாரண கூலியாக இருக்கும் ரஜினிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான மேன்சன் சொந்தமாக இருப்பது எப்படி என்பதும் கேள்விக்குறிதான். கப்பலில் கல்லை கட்டி சடலங்களை மறைக்க வாய்ப்பு இருந்தும், வில்லன் நாகர்ஜூனா சடலங்களை ஏன் எரிக்க வேண்டும், சத்யராஜை ஏன் அணுக வேண்டும் என்பதும் குழப்பமாக உள்ளது.
இப்படி படம் முழுக்க நிறைய கேள்விகள் வருகின்றன. அதே போல் ரயில்வே ஸ்டேஷனில் வில்லனின் மனைவி ரக்சிதாராம் அழைத்தவுடன் அவருடன் உடனே ஸ்ருதிஹாசன் காரில் ஏறிச் செல்லும் காட்சியை பார்த்து ரசிகர்கள், இதைக்கூட இயக்குனர் கவனிக்கவில்லையா என்று வாய்விட்டு சிரிக்கின்றனர். இப்படி படம் முழுக்க இயக்குனர் கோட்டை விட்ட இடங்கள் நிறைய உள்ளன.
இந்நிலையில் கூலி படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 151 கோடி ரூபாய் வசூலித்தது. 2ம் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்தது. 2 நாட்களில் 230 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் நேற்று 3வது நாளில் மட்டும் 80 கோடி வசூலித்து 3 நாட்களில் மொத்தம் 310 கோடி ரூபாய் என்ற வசூலை கூலி படம் கடந்திருக்கிறது. ரஜினி படம் என்ற ஒரே காரணத்தால் இந்த படம் 3 நாட்களில் வசூலில் 3 செஞ்சரியை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.





