தமிழ் சினிமாவில் கடந்த 33 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தவர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதி என்றும் பிறகு தளபதி என்றும் அழைக்கப்பட்ட விஜய் கடந்த 10, 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர் அந்தஸ்தை பெற்று பல வெற்றிப் படங்களை தந்தார். ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றார்.
குறிப்பாக விஜய் நடித்த படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வணிக ரீதியாக மிகப்பெரிய வசூலை குவித்தது. அதனால் விஜய் நடிக்கும் படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்களும் விஜய் படங்களை இயக்க இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டியதால் தமிழ் சினிமாவில் இதற்காக ஒரு பெரிய போட்டியே நிலவியது.
இந்த சூழ்நிலையில் அவர் கடந்த 2024ம் ஆண்டில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். கட்சி துவங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழக சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று இப்போது தமிழக முதல்வராகவும் விஜய் இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் எஸ் வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த ஜனநாயகன் படம் நேற்று திரைக்கு வந்தது.
கடந்த 6 மாதங்களாக சென்சார் பிரச்சனை காரணமாக இந்த படம் திரைக்கு வருவதில் இழுபறி நீடித்த நிலையில் ஒரு வழியாக ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த படம் முழுக்க முழுக்க விஜய்க்கான ஒரு படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு நிமிடம் வரை, தமிழ் சினிமாவை விட்டு வெளியேறிய நடிகர் விஜய்க்கு பிரிவு உபச்சார விழா நடத்துவது போல் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நெகிழ்ச்சியான காட்சிகளை பார்த்த தளபதி ரசிகர்களும் தவெக கட்சியினரும் மனம் கலங்கி கண்ணீர் விட்டு அழுதனர். விஜய்க்கு இதுதான் கடைசி படமா என்ற சோகமும் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்த காட்சிகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியான ஜனநாயகன் படத்தில் இடம்பெறவில்லை. இந்த காட்சிகள் இணையத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் பரவிய நிலையில், அங்குள்ள ரசிகர்கள் இப்படி ஒரு காட்சி படத்தில் வரவே இல்லையே என்று புலம்புகின்றனர்.
அதற்கு காரணம் முதல் நாளில் தியேட்டரில் அதிக காட்சிகள் என்பதால் படத்தில் கடைசியாக வரும் இந்த ஒரு நிமிட நெகிழ்ச்சியான காட்சியை அங்குள்ள தியேட்டர்களில் கட் செய்து நீக்கி விட்டனர் என்று தெரிய வந்துள்ளது. அதனால் அங்குள்ள தளபதி ரசிகர்கள் சினிமாவை விட்டு விலகிய விஜய் பற்றிய அந்த உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான காட்சிகள் படத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.





