சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் வாழ்க்கை யதார்த்தங்களை சமூக பிரச்னைகளை மனித வாழ்வியலை கதைக்களமாக்கி திரைப்படங்களாக தந்து பல இயக்குனர்கள் ஜெயித்திருக்கின்றனர். அதில் பாரதிராஜா கே பாக்யராஜ் விசு வி சேகர் சமீபத்திய இயக்குனர்கள் அமீர் சமுத்திரக்கனி பாண்டிராஜ் வரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ஆனால் இதில் மற்றொரு வகை படைப்பாளிகளும் இருக்கின்றனர். இவர்கள் யதார்த்த சினிமாவை மீறியவர்கள். சகட்டு மேனிக்கு கற்பனை செய்து அதை காட்சிப்படுத்துபவர்கள். நிஜத்தில் எதுவெல்லாம் சாத்தியம் இல்லையோ அதையே திரைப்படங்களில் கதைக்களமாக்கி ரசிகர்களின் உணர்ச்சி கொந்தளிப்பை தூண்டிவிட்டு அவர்களது அபிமான நாயகர்களை சரித்திர புருஷர்களாக விஸ்வரூபமாக காட்டி ஒரு வித்தில் ரசிகர்களை ஏமாற்றுபவர்கள்.
அந்த வரிசையில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சல் திலீப்குமார் கார்த்திக் சுப்பராஜ் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களது படங்களில் ஏ முதல் இசட் வரை படம் முழுக்க வன்முறை காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கும். கேங்ஸ்டர் கதைக்களம்தான் இவர்களது கதையாக இருக்கும். கத்தி துப்பாக்கி வெடிகுண்டு ரத்தம் வெட்டு குத்து மட்டுமே படம் முழுக்க நிறைந்திருக்கும்.
தியேட்டருக்குள் செல்லும் ரசிகர்கள், கதை குறித்தோ கதைக்களம் குறித்தோ எதையும் லாஜிக் ஆக யோசிக்காமல் இரண்டரை மணி நேரத்தை உற்சாகமாக கழித்துவிட்டு வர இவர்களது படங்கள் நிச்சயமாக கேரண்டியாக இருக்கும். ஆனால் படம் பார்த்த பிறகு, இதுவெல்லாம் சாத்தியமா, இப்படி எல்லாம் நடக்குமா என்று கேட்டால் அந்த கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பது தெளிவாக புரியும்.
நடிகர் ரஜினிகாந்த் ஒரு மாஸ் ஹீரோ. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவே கொண்டாடும் ஒரு ஆகச்சிறந்த கலைஞன். ஆனால் அவர் நடித்த கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 1989ம் ஆண்டில் வெளிவந்த சிவா என்ற படத்துக்கு பிறகு இப்போதுதான் 36 ஆண்டுகளுக்கு பின் கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆபாசமான, கவர்ச்சியான காட்சிகள் எல்லாம் இல்லை. படம் முழுக்க ரத்த வெறியாட்டம் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கூலி படத்துக்கு தரப்பட்டுள்ளது. அமீர்கான் நாகர்ஜூனா நடித்துள்ள காட்சிகளில் ரத்தம் தெறிக்க தெறிக்க படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு தக்காளி ஜாம்தான் ஷூட்டிங்கில் பயன்படுத்துவார்களாம். இப்படி தக்காளி சட்னியை ஊத்தி ஊத்தியே தலைவர் படம் பேரை கெடுத்துட்டாரே என இயக்குனர் லோகேஷ் கனகராஜை ரஜினி ரசிகர்கள் திட்டுகின்றனர்.





