மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் வெளியானது. கூலி படம் முதல் நாளில் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புக்கு மத்தியில் 151 கோடி ரூபாய் வசூலித்தது.
ஆனால் கூலி படத்தை பொருத்தவரை விமர்சன ரீதியாக மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீது ரசிகர்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருந்து வருகின்றனர். கைதி, விக்ரம் படங்கள் போல ஒரு சூப்பர் ஹிட் படத்தை சூப்பர் ஸ்டாருக்கு தருவார் என்று எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மொக்கையான ஒரு படத்தை இப்படி தந்து விட்டாரே என்று ரசிகர்கள் நொந்து போய் இருக்கின்றனர்.
கூலி படத்தில் சத்யராஜ் உபேந்திரா நாகர்ஜூனா சௌபின் சாஹிர் அமீர்கான் ஸ்ருதிஹாசன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தும் இந்த படத்தில் பலரது நடிப்பு எடுபடாமல் போய்விட்டது. ஏனென்றால் அவர்களுக்கான கேரக்டர் சரியான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. இதில் ரசிகர்களுக்கு திருப்தி அளித்த ஒரே கேரக்டர் வில்லன் கேரக்டரில் நடித்த சௌபின் சாஹர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றபடி மற்ற நடிகர்கள் எல்லாருமே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தனர். பொதுவாக இந்த படத்தில் கதை திரைக்கதை என்பது சுத்தமாக இல்லை. அதுவே இந்த படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக போய்விட்டது. குறிப்பாக படம் முழுக்க லாஜிக் மிஸ்டேக் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே இது போன்ற சுமாரான படம் எதுவுமில்லை, இந்த படத்தை இயக்கியது லோகேஷ் கனகராஜ் தானா என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் பாதி 2ம் பாதி என இரண்டிலுமே எந்த விதத்திலும் ரசிகர்களை இந்த படம் கவரவில்லை. இதை கிரி படம் 2 என்றும் பேட்ட 2 படம் என்றும் பலர் கலாய்க்கின்றனர்.
கூலி படம் ரிலீஸ் ஆன 14ம் தேதியன்று 151 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று 2வது நாளாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று இந்த படம் 79 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதாவது 2 நாட்களில் கூலி படத்தின் மொத்த வசூல் ரூ. 230 கோடியை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு கடும் விமர்சனத்தையும் தாண்டி இந்த அளவுக்கு படம் வசூலிக்க காரணம் ரஜினி என்ற அந்த மாஸ் ஸ்டார் தான் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.





