2025 ஆம் ஆண்டு தொடங்கிய போதே தமிழ் சினிமாவில் இருந்து வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்தது கூலி. இதற்குக் காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் என்னும் மாபெரும் இயக்குனரின் பிம்பம்தான். போதாக்குறைக்கு, நாகர்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என பிற மாநில நட்சத்திரங்களும் இடம் பெற்றிருந்ததால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அனிருத் இசையில் ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஹிட் அடித்து இருந்தன. அதேபோல் முன்பதிவிலும் கூலி திரைப்படம் புதிய சாதனையை படைத்திருந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் இதன் முன்பதிவு வேறு எந்த திரைப்படங்களுக்கும் இல்லாத அளவு இருந்தது. டிக்கெட்டுகள் உடனுக்குடன் விற்று தீர்ந்தன.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வேறு எந்த ஒரு திரைப்படத்திற்கும் இல்லாத அளவுக்கு கூலி படத்தில் முன்பதிவு இருந்ததாக பலரும் கூறுவதை இணையத்தில் பார்க்க முடிந்தது.
இப்படியான சூழலில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் ஒன்பது மணி காட்சிக்கு படம் ஒளிபரப்பப்படும் நிலையில், வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை நான்கு மணிக்கு படம் வெளியிடப்பட்டு விட்டது. இதேபோல் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 6 மணிக்கு படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இதில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை பார்த்தவர்கள் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், படம் நன்றாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இடைவேளை காட்சி நன்றாக உள்ளது என்றும், அதில் இருக்கும் சின்ன திருப்பமும் ஈர்ப்பதாகவும் சொல்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அற்புதமான பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறாராம்.
நாகர்ஜூனா மிக ஸ்டைலாக காட்சி அளித்தாலும், அவருக்கான கதாபாத்திரம் என்பது சரியாக எழுதப்படவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதேசமயம் சிலர் படத்தை சுமார் என்று கூறுவதையும் இணையத்தில் பார்க்க முடிகிறது. படத்தில் நாகர்ஜுனா தந்தையை ரஜினிகாந்த் கொல்வதும், அதற்கு அவர் சூப்பர் ஸ்டாரை பழி தீர்க்க துடிப்பதும்தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறுகிறார்கள். ஒட்டுமொத்தமாக கூலி திரைப்படம் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்து இருப்பதாகவே விமர்சனங்கள் வருகின்றன.





