ஹார்பரில் கூலியாக உள்ள நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜ் ஆராய்ச்சியாளர். அவர் ஒரு மின்சார நாற்காலியை கண்டுபிடிக்கிறார். அதில் அமர்ந்தவுடன் அந்த நபர் சில விநாடிகளில் சாம்பலாகி விடுகிறார். இதை தெரிந்துக்கொள்ளும் ஹார்பர் கடத்தல் வில்லன் குரூப், அவர்கள் கொல்லும் சடலங்களை, சத்யராஜை வைத்து சாம்பலாக்கி விடுகிறது. அதற்கு பெரிய தொகையும் சத்யராஜூக்கு கிடைக்கிறது.
நடிகர் சத்யராஜூக்கு ஸ்ருதிஹாசன் உள்பட 3 மகள்கள். அவர்களை காட்டி மிரட்டிதான் இதற்கு சத்யராஜை வில்லன் குரூப் பணிய வைக்கிறது. ஹார்பர் தாதாவாக சைமன் கேரக்டரில் நாகர்ஜூனா, அவரது அடியாளராக குட்டி தாதாவாக தயாளன் கேரக்டரில் சௌபின் சாஹிர் நடித்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஹார்பர் ரகசியங்களை தெரிந்துக்கொள்ளும் சத்யராஜை, சௌபின் சாஹிர் கொன்று விடுகிறார்.
தனது நண்பர் சத்யராஜ் இறந்த நிலையில், அங்கு வரும் ரஜினிகாந்த் அவரது மகள்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார். அப்போது வில்லனின் மிரட்டலால் அவரும் சத்யராஜை போலவே, ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்துக்கொண்டு சடலங்களை எரித்து சாம்பலாக்குகிறார். ஒரு கட்டத்தில் நாகர்ஜூனா அடித்துக் கொல்லும் சௌபின் சாஹிர் உயிர் பிழைக்க அவரை தப்பிக்க வைக்கிறார் ரஜினிகாந்த்.
ஆனால் அவருடன் ஸ்ருதிஹாசனும் சென்றுவிட அவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு ரஜினியை மிரட்டுகிறார் சௌபின் சாஹிர். இதற்கிடையே நாகர்ஜூனா மகன் காதலிக்கும் ரக்சிதா ராம், சௌபின் சாஹிர் மனைவி என்று ஒரு டிவிஸ்ட் வருகிறது. அவரும் கடைசியில் வில்லியாக மாறி ரஜினியின் நண்பர் சார்லியை மின்சார நாற்காலியில் அமர வைத்து கொலை செய்கிறார். நாகர்ஜூனாவின் மகனை சௌபின் சாஹிர் கொலை செய்கிறார்.
கடைசியில் ஸ்ருதிஹாசன் சத்யராஜின் மகள் அல்ல, ரஜினியின் மகள் என்ற உண்மை ரஜினிக்கு தெரிய வருகிறது. ரஜினிக்கு ஆதரவாக உபேந்திரா வந்து சண்டை போடுகிறார். கடைசியில் அமீர்கான் ஹெலிகாப்டரில் வந்து ரஜினியை கொல்ல முற்படுகிறார். ஆனால் கடைசி நேரத்தில் அது கூலி தேவா என்றவுடன் விட்டு விட்டு ரஜினியுடன் நண்பராகி விடுகிறார்.
இறுதியில் வில்லன் செளபின் சாஹிரை பெரிய குழியில் போட்டு ரஜினி மூடுகிறார். படமும் ஊத்தி மூடப்படுகிறது. படத்தின் மொத்த கதை இதுதான். படத்தில் வரும் 2 பாடல்களும் சௌபின் சாஹிர், ரக்சிதா ராம் ஆகிய 2 பேரின் நடிப்பும் நன்றாக உள்ளது. மற்றபடி படம் காட்டு மொக்கை மரண மொக்கை இப்படி கடும் விமர்சனங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒரு குப்பை கதையில் ரஜினி படம் தமிழ் சினிமாவுக்கு இப்போது அவசியம்தானா என்பதே லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாக உள்ளது. ஞாயிறு காலை பிஸியான நேரத்தில் இறைச்சி கடைக்குள் இரண்டரை மணி நேரம் அமர்ந்த அனுபவத்தை பெற விரும்புவோர், கூலி படம் பார்க்க தாராளமாக தியேட்டருக்கு செல்லலாம்.





