தமிழ் சினிமா தற்போது ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் மிக மிக முக்கியமானது கூலி. லோகேஷ் கனகராஜின் ஆறாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா எனும் கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
இதுபோக பாலிவுட் உலகில் இருந்து அமீர் கான், தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்திலிருந்து சௌபின் சாஹிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி விட்டன.
ரஜினிகாந்தை மையப்படுத்திய சிக்கிடு மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் மோனிகா ஆகிய இரண்டு பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்து விட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருக்க, சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அண்மையில் பேட்டி ஒன்றில் கூலி திரைப்படம் குறித்த பல்வேறு விஷயங்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து இருந்தார்.
அதில் இந்த திரைப்படத்தின் டப்பிங் பார்த்ததும் ரஜினிகாந்த் என்னை வந்து கட்டிப்பிடித்ததாகவும், தளபதி போன்று இருக்கிறது என்று அவர் கூறியதாகவும் தெரிவித்தார். கூலி திரைப்படத்தின் முதல் பாதி எமோஷனலாக இருக்கும் என்றும், இரண்டாம் பாதி ஆக்சன் பாணியில் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அமீர்கான் படத்தில் குறைந்த காட்சிகள் வந்தாலும் அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அது மட்டுமல்ல இந்த படத்திற்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதை அவரே கூறியிருந்தார். செளபின் சாகிர் கதாபாத்திரத்தில் முதலில் பகத் பாஸில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் கால் சீட் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
தங்க வாட்ச்களை மையப்படுத்தியே கூலி திரைப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படியான சூழலில் படம் ரிலீஸ் ஆகி எட்டு வாரங்களுக்கு பிறகு, ஓடிடி தளத்தில் கூலியை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம். அமேசான் பிரைம் நிறுவனம் இந்த திரைப்படத்தை வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





