நடிகர் சிம்புவிற்கு கடந்த ஆண்டு பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை ஜில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய திரைப்படங்களை எடுத்த ஒபேலி கிருஷ்ணா இயக்கி இருந்தார். கௌதம் கார்த்திக் நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்திற்கு முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தன. இதனால் பத்து தல படத்தின் மேலும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் அந்த திரைப்படம் சரியாக செல்லாமல் போக, சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் மிக தாமதமாகவே வெளியானது. அதன்படி அவர் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தேசிங்கு பெரியசாமி இதற்கு முன்னதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை எடுத்திருந்தார். இதனால் இந்த கூட்டணியை மிகவும் எதிர்பார்த்தனர் சிம்பு ரசிகர்கள். ஆனால் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டது.
வரலாறு சம்பந்தப்பட்ட கதையை இயக்குனர் தொட்டிருப்பதால், அதற்கான பிரீ புரோடக்சன் பணிகளுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. இது மட்டுமல்லாமல் படத்தில் இரண்டு சிம்பு நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான அறிவிப்பு வெளியானது.
இதனிடையே, சிம்பு கோகுல் கூட்டணியில் உருவாக இருந்த கொரோனா குமார் திரைப்படம் தற்போது வேறு ஒரு நடிகருக்கு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த ப்ராஜெக்ட் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. சிம்புவும் இதில் நடிக்க விருப்பம் செலுத்தாததால், தற்போது விஷ்ணு விஷால் கொரோனா குமார் திரைப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





