தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று ஒரு காலகட்டத்தில் அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். எம்ஜிஆர் சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்தார். நாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்த சிவக்குமார், ஆரம்பத்தில் படங்களில் நடித்த போது கடவுள் முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி ஓவியம் யோகா தியானம் அபார நினைவாற்றல் என பல விஷயங்களில் சிறந்து விளங்குபவர் சிவக்குமார். இப்போதும் மேடையில் 3 மணி நேரம் கூட அசராமல் சொற்பொழிவு செய்யும் அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவராக சிவக்குமார் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுக்கு பிறகு சில ஆண்டுகள் டிவி சீரியல்களில் நடித்த அவர் இப்போது நடிப்பதையே கைவிட்டு விட்டார்.
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தனர். ஆனால் சமீபகாலமாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் பலவும் பலத்த தோல்வியை சந்தித்தன. அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் மிகவும் மோசமான பிளாப் படமாக அமைந்து விட்டது.
இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வருகிறது. அதே போல் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படம் உருவாகி வருகிறது. மேலும் சில முக்கிய படங்களில் சூர்யா நடிக்கிறார். குறிப்பாக வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பும் சில மாதங்களில் துவஙக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சூர்யா கூறுகையில், நான் இந்தி நடிகர் ஷாருக்கான் சொல்லும் சில வரிகளை அடிக்கடி வாழ்க்கையில் சொல்லிக்கொண்டே இருப்பேன். நாய் மாதிரி உழைக்கணும், ராஜா மாதிரி வாழணும் என்று அவர் சொல்வார். அதை நான் என்னுடைய வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா ஏதேனும் இதுபோன்ற கருத்துகளை சொன்னால் சமூக வலைதளங்களில் அவர்களை பிடிக்கா சிலர் தாறுமாறான கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர். இப்போது தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வரும் சூர்யா, ராஜா மாதிரி வாழ்வதாக கூறியிருப்பது குறித்தும் ஏதேனும் கமெண்ட் செய்வார்களே, இவரே அவர்களுக்கு கண்டென்ட் கொடுக்கிறாரே என சூர்யாவின் தீவிர ரசிகர்கள் புலம்புகின்றனர்.





