இன்றைய உலகம் விளம்பர உலகமாகி விட்டது. பத்திரிகை சேனல்கள் ரேடியோ டிவி சேனல்கள் மொபைல் போன் சினிமா தியேட்டர்கள் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் என எங்கும் எந்த இடமாக இருந்தாலும் விளம்பரங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. தினமும் தெரிந்தோ தெரியாமாலோ பல நூற்றுக்கணக்கான விளம்பரங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன.
கலியுகம் என்பதை விட இன்றைக்கு விளம்பர யுகம் என்றும் சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகி விட்டது. எதற்கெடுத்தாலும் விளம்பரம் விளம்பரம் என்றே மக்களின் சிந்தனைக்குள் திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு பொருள் விற்பனையில் தரமோ விலையோ முக்கியமின்றி விளம்பரம்தான் முக்கியம் என்ற நிலைக்கு இன்றைய நிலை மாறிவிட்டது. அதனால் விளம்பரங்களுக்காக பல ஆயிரக்கணக்கான கோடிகள் மாதந்தோறும் செலவிடப்படுகின்றன.
கடந்த 2023ம் ஆண்டில் பெங்களூருவில் ஷாம் பகதூர் என்ற பகுதியில் உள்ள ஐனாக்ஸ் தியேட்டரில் மாலை 4.05 மணி காட்சி பார்ப்பதற்காக கணவனும் மனைவியும் தியேட்டருக்கு வந்தனர். ஆனால் 4.05 மணிக்கு துவங்க வேண்டிய படம் 4.30 மணிக்கு தான் படம் துவங்கியது. கிட்டத்தட்ட 25 நிமிடம் தனியார் விளம்பரங்கள் தியேட்டரில் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னரே படம் துவங்கியது.
இதனால் மன உளைச்சலுக்கு சம்பந்தப்பட்ட அந்த தம்பதி, நுகர்வோர் நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய காரணத்திற்காக வழக்கு உள்ளிட்ட செலவினங்கள் உள்பட 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தியேட்டர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்காக திரையரங்கில் 25 நிமிடம் ஓடிய விளம்பரங்களை மொபைல் போனில் படம் பிடித்து நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பித்தார். இது பைரசி விதிகளின்படி தவறு என தியேட்டர் நிர்வாகம் கூறிய நிலையில்,ஆதாரத்திற்காக மட்டுமே இப்படி அதிக நேரம் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதை நிரூபிக்க புகார்தாரர் தரப்பில் படம்பிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசு விளம்பரங்கள் ஒளிபரப்ப நேரம் தேவையாக உள்ள என்று தியேட்டர் நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 10 நிமிடங்களுக்குள் ஒளிபரப்பி முடிக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வருகிறார்கள், அவர்களுக்கு வேறு வேலையே இருக்காது என்று கருதி அவர்களது நேரத்தை வீணடிக்க எந்த விதமான உரிமையும் தியேட்டர்களுக்கு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கோர்ட் கூறியுள்ளது.





