இயக்குநர் விக்னேஷ் சிவன், சிலம்பரசன் – வரலட்சுமி நடித்த போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை டைரக்ட் செய்தார். இதில் எந்த படமுமே மிகப்பெரிய வெற்றிப்படம் அல்ல.
ஆனால் இந்த காலகட்டத்தில் நடிகை நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால், 7 ஆண்டுகளுக்கு ஒன்றாக பொதுவெளிகளில் வந்ததால் அந்த அறிமுகம் விக்கி சிவனின் இமேஜை தாறுமாறாக உயர்த்தியது. கடந்தாண்டில் திருமணமும் செய்துக்கொண்டு, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர்.
ஒரு கட்டத்தில் அஜீத்குமார் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் கதை பிடிக்கவில்லை என அஜீத்குமார் விலகிக்கொள்ள படம் இயக்கும் வாய்ப்புகளின்றி விக்கி, சில படங்களுக்கு பாடல்களை எழுத துவங்கி, திடீர் கவிஞராக மாறினார்.
இதையடுத்து, லவ்டுடே பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவும், அதை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவும் முடிவானது. ஆனால் 65 கோடிக்கு மேல் பட்ஜெட் எகிறியதால், நாங்கள் தயாரிக்கவில்லை என ராஜ்கமல் நிறுவனம் விலகிக்கொண்டது. அதையடுத்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எஸ் லலித்குமார் படத்தை தயாரிக்க முன்வந்தார். 65கோடி முதல் 70 கோடி ரூபாய் வரை பட்ஜெட் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதற்கிடையே விக்படத்துக்கு எல்ஐசி என விக்கி டைட்டில் பெயரிட்டார். அதாவது லவ் இன்சூரன்ஸ் கார்பரேசன் என்பதன் சுருக்கம் என்றார். ஏற்கனவே இந்த பெயரை டைட்டிலாக நான் பதிவு செய்திருக்கிறேன் என தயாரிப்பாளர் தமிழ்குமரன் தெரிவித்தார். ஆனால் அதை விக்கி கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினார்.
இந்த பஞ்சாயத்து கோர்ட் வரை போயுள்ள நிலையில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ( லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) நிறுவனம், எங்களது நிறுவன பெயரை உங்கள் படத்துக்கு தலைப்பாக எப்படி பயன்படுத்தலாம் என செவன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கேள்வி எழுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் படத்தை பெயரை மாற்றாவிட்டால் சட்டரீதியாக, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.





