பொதுவாகவே சில படங்கள் சர்ச்சைக்குரிய கதைக்களத்தில் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது கடும் விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுகின்றன. இது அந்த படங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை கொடுத்தாலும் ஒரு படைப்பாக அது சமுதாயத்தில் அங்கீகாரம் பெறப்படுவதில்லை.
அந்த வரிசையில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இந்த படம் குறித்து கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்தை காமாக்யா நாராயணன் சிங் என்பவர் டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதில் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி மாட்டு இறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், கேரளா முழுமையான நல்லிணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கேரளா முழுவதும் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது தவறான ஒரு தகவலை கொடுப்பதுடன் மக்களிடையே தவறான உணர்ச்சிகளை தூண்டவும் செய்யலாம். இங்குதான் தணிக்கை வாரியம் தனது பணியை செய்ய வேண்டியிருக்கிறது. பொதுவாக நாங்கள் எந்த படத்திலும் தலையிடுவதில்லை. கலை என்பது சுதந்திரம். ஆனால் அது உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு கேரளா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது சில வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்தும். நாளை படத்தை பார்த்துவிட்டு இது குறித்து முடிவு தெரிவிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருக்கிறார். அந்த படத்தின் திரையிடல் நேரம் மற்றும் இடம் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை நீக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





