தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். குறிப்பாக காக்க காக்க விண்ணைத் தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு போன்ற அவரது படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. இயக்குனராக மட்டுமின்றி அவர் சொந்தமாக சில படங்களை தயாரிக்கவும் செய்தார். இதனால் அவர் ஒரு கட்டத்தில் படங்கள் தந்த நஷ்டத்தால் கடன் தொல்லைக்கும் ஆளானார்.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மற்றும் அவரது சொந்தத் தயாரிப்பில் உருவான படம் துருவ நட்சத்திரம். நடிகர் சியான் விக்ரம் ரித்து வர்மா சிம்ரன் டிடி நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017 -18ம் ஆண்டிலேயே வெளியாக வேண்டிய படம் துருவ நட்சத்திரம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கடன்கள் மற்றும் பொருளாதார சிரமங்கள் காரணமாக இந்த படம் ரிலீஸ் தாமதமாகி கொண்டே போனது. பலமுறை துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கோர்ட் வழக்கு என சிக்கலில் இந்த படம் சிக்கிக்கொண்டு தவித்தது. இந்த படம் திரைக்கு வருவது என்பதே பெரும் போராட்டமாக மாறியது.
துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீட்டை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது, நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15ம் தேதிக்கு முன்பு வெளியிடலாம். இந்த படத்தின் நிதி விவகாரங்களை கையாள தனியாக, கொண்டாடுவோம் என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் புதிய வங்கி கணக்கு துவக்க வேண்டும்.
அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும் நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் நீதிபதி கூறியிருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளரான கௌதம் மேனன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடன்காரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக அவர் சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை பெற வேண்டி இருக்கும்.
மேலும் படத்தின் வெளியீட்டு தேதியை இறுதி செய்வதற்கு முன்பு அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி இருக்கும். ஒருவேளை ஜூன் 15ம் தேதிக்கு துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முடியாவிட்டால் காலம் காவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





