நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது. அதற்கு முந்தைய நாள் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வெளியாக உள்ளது. அதனால் இந்த 2 படங்களுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு தரப்பு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் வருகிற ஜனவரி 3ம் தேதி பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விழாவில் இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தாரை மேடையில் கௌரவப்படுத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பராசக்தி என்ற படத்தில் முதலில் நடித்தவர் சிவாஜி கணேசன். அவருக்கு மரியாதை செய்யும் நோக்கத்தில் அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்படுகின்றனர்.
அதே போல் இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் இதுவரை அவர் நடித்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த விழா மேடையில் நடிகர் சிவகார்த்திகேயன் மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் மலேசியாவில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய இயக்குனர் எச் வினோத், ஜனநாயகன் படம் கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும். நடுவுல புகுந்து அடிச்சிடலாம் என்று யோசிக்கிறவங்களுக்கு ஒண்ணு சொல்றேன். ஐயா இது தளபதி படம். உங்க மைண்ட்ல இருக்கிற எண்ணங்களை எல்லாம் அழிச்சிருங்க என்று மறைமுகமாக நடிகர் சிவகார்த்திகேயனை தாக்கி பேசியிருந்தார்.
அதனால் சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வருகிற 3ம் தேதி நடக்கிற பராசக்தி படம் இசை வெளியீட்டு விழாவில், இயக்குனர் எச் வினோத் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அல்லது படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தக்க பதிலடி கொடுப்பார்களா, என்ற எதிர்பார்ப்பு எஸ்கே ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.





