சில மாதங்களுக்கு முன்பு தவெக நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த், தளபதி நிகழ்ச்சிக்கு வருவதில் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அவரை எங்கு அழைத்தாலும் வந்துவிடுவார். ஆனால் அவரை நாங்க பாதுகாப்பா இட்டுனு வந்து பாதுகாப்பா திருப்பி இட்டுனு போறதுதாங்க கஷ்டம் என்று பேசியிருந்தாா்.
இப்போது அவர் பேசிய அந்த டயலாக்கையே கொஞ்சம் மாற்றி, பேசாம பிரசாரத்துக்கு கார்ல இட்டுனு வந்து கார்லயே இட்டுன்னு போயிருந்தால் இத்தனை பிரச்னை வந்திருக்காது, என்று சொல்லும் அளவுக்கு கரூரில் 41 உயிர்கள் பலியான சம்பவம் மக்களை கடும் விரக்தியடைய செய்திருக்கிறது.
நடிகர் விஜய் ஒவ்வொரு சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட போதும் பிரசார வாகனத்தை குறிப்பிட்ட ஊரில் கூட்டம் நடக்கும் பகுதியில் முன்பே நிறுத்தி வைத்துவிட்டு, அதன்பிறகு இவர் காரில் அந்த பகுதிக்கு சென்றிருந்தால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டு இருக்காது. விஜயின் காரை யாரும் மணிக்கணக்கில் பின்தொடர்ந்திருக்க முடியாது.
நாள் முழுவதும் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து நெரிசலில் சிக்கி உயிரிழப்பும் நடந்திருக்காது என்பதே உண்மை. பிரசார வாகனத்தை எடுத்துக்கொண்டு விஜய் ரோடு ஷோ நடத்தியதன் விளைவுதான் கரூர் சம்பவத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதையடுத்து தற்போது நடிகர் விஜயின் சொகுசு பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கான நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மனுவை விசாரித்த நீதிபதிகள், தவெக தலைவர் விஜயின் பிரசார பேருந்து விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லையா என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விஜயின் பிரசார வாகனத்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து விஜய் தனது தேர்தல் பரப்புரைக்காக பயன்படுத்தி வரும் வாகனத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துயரத்திற்கு அவர் பயன்படுத்திய பெரிய வாகனமும் ஒரு காரணம் என்று பல தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த வாகனம் ரோட்டில் வரும்போது அருகில் தவெக தொண்டர்கள் ஓட்டி வந்த டூவீலர்கள் மீது தடுமாறி விபத்து நடந்த காட்சிகள் வீடியோவில் ஏற்கனவே வைரலாகி உள்ளன.





