நடிகர் தனுஷிற்கு கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கவித்துவமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தனுஷிற்கு முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்தது. இதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான நானே வருவேன் மற்றும் வாத்தி ஆகிய இரண்டு திரைப்படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன.
இந்த நிலையில் தற்போது அவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை எடுத்த அருண் மாதேஸ்வரன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து தனுஷ் தனது 50-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை கதை களத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை தனுஷே இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நெருங்கியுள்ளது. இதன் பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா நாகார்ஜுன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இதை தொடர்ந்து மாரி செல்வராஜுடன் ஒரு படம், அருண் மாதேஸ்வரனுடன் மீண்டும் ஒரு படம் என அவர் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில் அவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே இது குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது.
தீவிர இளையராஜாவின் ரசிகரான அவர், மேடைகளில் ஏறும்போது அதை உறுதிப்படுத்துவார். இந்த நிலையில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பதில் தீவிரம் காட்டி வரும் தனுஷ், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப்பற்றி நேரடியாக இளையராஜாவிடம் சென்று பேசி வருகிறாராம். இந்த படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலால் இளையராஜாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கிறார்கள்.





