தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற புகழ் பெற்ற நடிகர் கமல்ஹாசன் தொட்ட உயரங்களை அந்த சிகரங்களை யாராலும் நெருங்க கூட முடியாது என்பதுதான் உண்மை. இயக்குனராக நடிகராக பாடகராக கவிஞராக தயாரிப்பாளராக தொழில்நுட்ப கலைஞராக கமல் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தமாக சாதனைகளை செய்தவர் என்றால் அது மிகையல்ல.
ஆனால் இன்று மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து அது மக்கள் மத்தியில் போணி ஆகாத நிலையில் திமுகவின் ஆதரவாளராக மாறி ராஜ்ய சபா எம்பி ஆகவும் வலம் வருகிறார். முதலில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து டிவியை ரிமோட்டை உடைத்த கமல் அவரது டார்ச் லைட்டையும் உடைத்துக்கொண்டு நிற்கிறார். கட்சியை மட்டுமின்றி தன்னையும் திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார்.
ஒரு திரைப்பட கலைஞனாக கமல் செய்த சாதனைகள் ஏராளம். அதுவே காலம் காலமாக அவரை பெயரை சொல்லும். இனி அரசியலில் சம்பாதித்துதான் வாழ வேண்டும் என்ற நிலையிலும் கமல் இல்லை. ஏற்கனவே தேவைக்கு மீறிய சொத்துகளுடன் தான் வசதியாக வாழ்ந்து வருகிறார். சினிமா படங்களும் தயாரிக்கிறார். இன்னும் படங்களில் நடிக்கிறார்.
இப்படிப்பட்ட சூழலில் அரசியலில் மக்கள் செல்வாக்கும் வரவேற்பும் கிடைக்கவில்லை என்றால் கட்சியை கலைத்து விட்டு கௌரவமாக சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம். டைரக்ட் செய்யலாம். கதை எழுதலாம். ஒரு கலைஞனாக அவருக்கு தமிழ் சினிமாவும் ரசிகர்களும் எப்போதும் அவரை வரவேற்க தயாராக இருக்கின்றனர்.
ஆனால் இப்போது தலைவன் இருக்கிறான் திராவிட தலைவன் இருக்கிறான் என்று திமுகவுக்கு தேர்தல் பிரசார பாடல் எழுதி நடித்துக்கொண்டு இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இதை பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், இதெல்லாம் தேவையா கோபால்? உலக நாயகனாகிய நீங்கள் இப்போது ஜால்ரா நாயகன் ஆகிட்டீங்களே என்றுதான் புலம்புகின்றனர்.
வாழவே வழி தெரியாதவர்கள் தான் அரசியலை நம்பி பிழைக்க வேண்டும். ஊழல்வாதிகளின் பின்னால் செல்ல வேண்டும். ஜால்ரா அடிக்க வேண்டும். உழைப்பும் திறமையும் நிறைந்த உங்களை போன்ற கலைஞானி, சினிமாவில் சாதிப்பதை விட்டு விட்டு ஸ்டாலினுக்கு புகழாரம் பாடப் போனது சரிதானா? நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே புறக்கணித்த அரசியல் களம், உங்களையும் புறக்கணிப்பதில் ஆச்சரியம் என்ன? அசிங்கப்பட்டது போதும். ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்துவிடுங்கள் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





