நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் வெற்றிப்படங்களாக, சில படங்கள் சராசரி படங்களாக இருந்தன. பெயிலியர் படங்கள் என பெரிய அளவில் தோல்வியடைந்த படங்கள் எதுவும் இல்லை.
தற்போது ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் ஜப்பான் என்ற படத்தில், கார்த்தி நடித்திருக்கிறார். இதில் கதாநாயகியாக அனு இமானுவேல் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இது கார்த்தியின் 25வது படமாகும்.
நேற்று முன்தினம் மாலை, ஜப்பான் படத்தின் டீசர் வெளியானது. இதில் நான்கு மாநிலங்கள் தேடும் மிகப்பெரிய கொள்ளைக்காரன் கேரக்டரில் கார்த்தி நடித்திருக்கிறார். கெட்டப்பில் மிக வித்யாசமாக தெரிகிறார். 182 வழக்குகள் ஜப்பான் மீது இருப்பதாகவும், போலீசில் இதுவரை ஜப்பான் சிக்கவில்லை போன்ற காட்சிகள், டீசரில் இடம்பெற்றுள்ளன.
இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. கார்த்தியின் 25வது படம் என்பதால், இதற்கான சிறப்பு விழா ஒன்றை வரும் 28ம் தேதி சென்னை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரை அவருடன் படத்தில் நடித்தவர்கள், படத்தின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை அழைத்து சிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கிடையே, நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் மாபெரும் வெற்றி பெற வாழ்த்தும் விதமாக, கார்த்தி மக்கள் நல இயக்கம் சார்பில் வித்யாசமான ஒரு ஏற்பாட்டை செய்திருக்கின்றனர். அதாவது கடந்த 17ம் தேதி முதல், வரும் நவம்பர் 10ம் தேதி வரை 25 நாட்களுக்கு, தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக வாகனத்தில் தினமும் ஆயிரம் பேருக்கு உணவு எடுத்துச் செல்லப்பட்டு, ஆங்காங்கு விநியோகம் செய்யப்படுகிறது.
சென்னை தி நகரில் நடந்த இதன் துவக்க விழாவில் கார்த்தி மக்கள் நல இயக்க நிர்வாகிகள் முன்னிலையில், ஜப்பான் படத்தின் இயக்குநர் ராஜூ முருகன், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு ஆகியோர் இந்த திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர். அதன்படி தொடர்ந்து தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு வித்யாசமான ஐடியாவாக இருக்கே என, கோலிவுட் வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர்.





