தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் கொடூரமான வில்லன் யார் என்றால் அது நடிகர் சத்யராஜ் தான். இயக்குனர் மணிவண்ணன் இயக்கிய 24 மணி நேரம், 100வது நாள் போன்ற படங்களில் சத்யராஜின் வில்லன் நடிப்பு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. அந்த நேரத்தில் நடிகர்கள் ரஜினிக்கும், கமலுக்கும் பிரதான வில்லன் நடிகர் சத்யராஜ்தான். ஆனால் மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு ரஜினிக்கும் சத்யராஜுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், கமல் படங்களில் மட்டுமே சத்யராஜ் வில்லனாக நடித்தார்.
நடிகர் சத்யராஜிடம் உள்ள திறமையான நடிப்பை பார்த்து அசந்து போன நடிகர் கமல்ஹாசன், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சத்யராஜ் ஹீரோவாக கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகு இயக்குனர் பாரதிராஜா, சத்யராஜை கடலோரக் கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு தொடர்ந்து இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், மனோபாலா, பி வாசு உள்ளிட்டோர் இயக்கிய பல படங்களில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முன்னணி நட்சத்திர நடிகராக சத்யராஜ் மாறி படங்களில் நடித்து, பல வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் அவர் அப்பா, அண்ணன் மற்றும் முக்கியமான குணச்சித்திர வேடங்களில் சத்யராஜ் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் பாகுபலி கட்டப்பா போன்ற நல்ல கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
அவரைப் போலவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் ரசிகர்களை மிரட்டியவர் ஆனந்தராஜ். அவரும் சத்யராஜ் வில்லனாக நடித்த காலகட்டத்தில்தான், தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார். குறிப்பாக விஜயகாந்த் படங்களில் ஆனந்தராஜ் பிரதான வில்லனாக பல படங்களை நடித்திருக்கிறார். பிறகு ஆனந்தராஜ் சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இரட்டை நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். இப்போது அவரும் குணச்சித்திர நடிகராக மாறி பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக காமெடி நடிப்பில் அசத்துகிறார்.
திருப்பூரைச் சேர்ந்த இயக்குனர் ஏஆர்கே சரவண் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியான படம் மரகத நாணயம். இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்யாணி, சங்கிலி முருகன், ஆனந்தராஜ், மைம்கோபி, பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நிக்கி கல்யாணிக்கு காளிவெங்கட் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக அமைந்து பெரிய வெற்றியை பெற்றது.
மரகதநாணயத்தை கதைக்கருவாக வைத்து காமெடி, திரில் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மரகத நாணயம் படம் 2ம் பாகம் வருமா என்று டைரக்டரிடம் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது மரகத நாணயம் 2ம் பாகம் உருவாகிறது. இந்த படத்தில் ஆனந்தராஜூம் நடிக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சத்யராஜ் நடிப்பதாக தெரியவந்துள்ளது. இரும்பொறை என்ற மன்னன் கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். ஆனந்தராஜ், சத்யராஜ் இணைந்து நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





