தமிழ் சினிமாவில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு துணிச்சலான ஒரு நடிகர் இருந்தார் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அவர் தைரியத்தில் ஒரு ஹீரோவாக தான் இருந்தார். எந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றாலும் அதை எந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாக எடுத்து செய்யும் மனிதராக அவர் இருந்திருக்கிறார்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய உதாரணம் என்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் பல ஆண்டுகளாக கடனில் சிக்கி தத்தளித்த நிலையில் விஜயகாந்த் தலைவராக பொறுப்பேற்றவுடன் அந்த கடன்களை அடைக்க முன்வந்தார். இதற்காக ரஜினி கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் திரட்டி வெளிநாடுகளுக்கு தனது சொந்த பொறுப்பில் அழைத்து சென்றார்.
துபாய் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் நட்சத்திர இரவுகளை நடத்தி அவர் தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை ஆட வைத்து கலை நிகழ்ச்சி நடத்தினார். அதில் வந்த பெரிய வருவாயில் நடிகர் சங்க கடனை முற்றிலுமாக அடைத்த கேப்டன் விஜயகாந்த். 1.75 கோடி ரூபாய் வரை சங்கத்தில் இருப்பும் வைத்திருக்கிறார். அந்தளவுக்கு எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் மிக்கவர்தான் விஜயகாந்த்.
தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த் நடப்பு ஆண்டில் தனது 50வது பொன்விழா ஆண்டில் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட எந்த சினிமா தொழில் அமைப்பும் விழா நடத்த முன்வரவில்லை.
இதுகுறித்து தற்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ள பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். எனது கணவர் விஜயகாந்த் இப்போது இருந்திருந்தால், ரஜினியின் 50வது பொன்விழாவை சிறப்பாக விழா எடுத்து கொண்டாடி இருப்பார்.
எனவே திரைத்துறை சார்ந்த சங்கங்களும் அமைப்புகளும் இணைந்து நடிகர் ரஜினிகாந்துக்கு பொன்விழா ஆண்டு பாராட்டு விழாவை நடத்த முன்வர வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கையாக முன்வைத்திருக்கிறார். இதற்கு பிறகாவது 74 வயதிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டு விழா நடத்தி கௌரவப்படுத்த தமிழ் சினிமா அமைப்புகள் முன்வர வேண்டும்.





