நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படம் தங்கலான். ஆங்கிலேயர் காலத்தில் கர்நாடகா மாநிலத்தில் தங்க வயலில் வேலை செய்த கொத்தடிமை தொழிலாளர்கள் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டது இந்த படம். சியான் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தனது படங்களில் தலித்திய அரசியல் பேசுவதாகவும், தலித்திய குறியீடுகளை தொடர்ந்து தனது படங்களில் செய்து வருவதாகவும் பா ரஞ்சித் மீது குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுகின்றன. ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. இதனால் சொற்பமான படங்களையே இதுவரை டைரக்ட் செய்திருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமான ஒரு இயக்குனராக இருக்கிறார். அதில் ரஜினி படங்களை அவர் இயக்கியதும் ஒரு முக்கியமான காரணம்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தங்கலான் படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.57 கோடியை கடந்து வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதில் பா ரஞ்சித் இயக்கிய படம் என்பதை கடந்து சியான் விக்ரம் நடித்த படம் என்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏனெனில் பிதாமகன், சேது, அன்னியன், ஐ, ராவணன், காசி என தனது நடிப்பில் எல்லைகளை கடந்த திரைக்கலைஞன் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தங்கலான் குறித்து பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் அதில் மிக முக்கியமான சொல்லப்பட்டது, படத்தில் பல காட்சிகளில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்கள் பேசுவது புரியவில்லை. வசனங்கள் புரியாததால் படத்தின் போக்கு தெரியவில்லை என்றும் கடும் விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து இப்போது தங்கலான் படத்தில் பல முக்கிய காட்சிகளில் தமிழ் சப்டைட்டில் வைக்க முடிவாகி உள்ளது. அதே போல் ஆங்கில வசனங்கள் வரும் காட்சியிலும் தமிழ் சப்டைட்டில் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழ் படத்துக்கே தமிழில் சப் டைட்டிலா என சினிமா விமர்சகர்கள் கலாய்த்து வருகி்னறனர். மேலும், படம் ரிலீஸாகி ஒரு வாரம் ஆன நிலையில், இப்போது படக்குழு இந்த முடிவுக்கு வந்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





