இந்திய அளவில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை தந்துள்ளார். இசை ஞானி என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
இப்போது 84 வயதுகளை கடந்தும் தளராமல் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சிம்பொனி வேலியண்ட் சாதனை செய்திருக்கிறார். இவரது இசையில் உருவான பல பழைய பாடல்கள் பலவும் இப்போதைய படங்களில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இதனால் காப்பிரைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் அடிக்கடி வருகின்றன.
இந்நிலையில் சரிகம நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அதில் 1976ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து படங்களின் இசை மற்றும் ஒளிப்பதிவு உரிமையை சட்டப்படி பெற்றிருந்தோம். ஆனால் இளையராஜா அந்த பாடல்களை தனது சொந்த பாடல்கள் என்று கூறி பிற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
எங்கள் நிறுவனத்தின் பாடல்கள் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர். இதில் சரிகம நிறுவனத்தின் வசமுள்ள 134 திரைப்படங்களில் பாடல்களை பயன்படுத்தவோ அவற்றுக்கு உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமை வழங்குவோ கூடாது என டில்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த தடையை நீக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அன்னக்கிளி 16 வயதினிலே முள்ளும் மலரும் ராஜபார்வை நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவும் உரிமம் பெறவும் உரிமை இல்லை எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே மூடுபனி படத்தில் இடம்பெற்ற என் இனிய பொன் நிலாவே பாடல் குறித்த ஒரு வழக்கில் காப்பிரைட் சட்டப்படி ஒரு பாடலின் இசைக்கு மட்டுமே இசையமைப்பாளர் உரிமை கோரமுடியும். முழு பாட்டுக்கும் உரிமை கோர முடியாது.
இசை படைப்பில் பாடல் வரிகள் அல்லது ஒளிப்பதிவுகள் அடங்காது என்றும் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இளையராஜா தன்னுடைய பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று பிரச்சனை செய்து வந்த நிலையில் இப்போது இளையராஜா இசையமைத்த பாடல்களையே அவர் உரிமை கொண்டாட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.





