கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவ சிம்பு. ரசிகர்களால் எஸ்டிஆர் என்று அழைக்கப்படும் சிம்பு சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். இருந்தாலும் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதனையடுத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி பிறகு உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த அவருக்கு மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவும் அவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்தனர். ஆனால் அடுத்ததாக நடித்த பத்து தல திரைப்படம் தோல்வியை சந்தித்தது. தற்போது அவர் கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது அவருக்கு 48ஆவது படமாகும்.
இந்தக் கதையை தேசிங்கு பெரியசாமி முதலில் ரஜினிகாந்த்திடம் சொன்னார். அவர் ஒத்துக்கொள்ளாததால் சிம்புவிடம் வந்தார். இந்தப் படத்துக்காக சிம்பு பல விஷயங்களில் பயிற்சி பெற்றுவருகிறார். படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தேசிங்கு பெரியசாமி, “படத்தின் ஷூட்டிங் தொடங்க தாமதமாவதற்கு காரணம் சிம்பு இல்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன். படத்தின் ப்ரீ புரொடக்ஷன் இன்னும் முடியவில்லை அதுதான் காரணம்.
எஸ்டிஆர் 48 படம் முடியும்வரை வேறு எதிலும் கமிட்டாகமாட்டேன் என சிம்புவும் சொல்லிவிட்டார். அதேபோல் படத்தின் பெரும்பாலான காட்சிகளை செட் போட்டுத்தான் எடுக்கவிருக்கிறோம். அதற்கான வேலைகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தின் கதையை கமல் ஹாசன் சாரிடம் சொன்னேன். அப்போது அவர் எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார்.
அதாவது முதலில் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதனையடுத்து என்னிடம் அவர், இந்தப் படம் தம்பி சிலம்பரசனின் கரியரில் முக்கியமான படமாக அமைய வேண்டும். அதனால் ஷூட்டிங்கை முன்னரே பக்காவா பிளான் செய்திடுங்கள். அதேபோல் வியாபாரத்திற்காக மற்ற மொழிகளில் இருந்து பான் இந்தியா நடிகர்களை இதில் கமிட் செய்ய வேண்டாம். கதை தேவைப்படும் வகையில் மட்டும் நடிகர்களை தேர்வு செய்யுங்கள். தேவைப்படும்பட்சத்தில் மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைக்கலாம் என கூறினார்” என்று பேசினார்.





